பல நாள் திருடன் ஒரு நாள் அகப் படுவான் என்பது போல ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயற்சித்து வந்த திமுக மத்திய அமைச்சர் ராசா, எதிர்கட்சிகளின் நெருக்கடி தாங்காமல் ராஜினாமா செய்து விட்டார்.
ராஜினாமா செய்ததற்கு முந்தைய நாள் வரை, தான் தவறே செய்யவில்லை என்பதால், ராஜினாமா செய்ய தேவையில்லை என்று அவரும், அவர் தலைவர் கருணாநிதியும் கூறி வந்தனர். 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், திமுக அமைச்சர்கள், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில், எந்த நிபந்தனையுமின்றி ஆதரவளிக்க அதிமுக தயாராக உள்ளது' என ஜெயலலிதா கூறியவுடன், வேறு வழியின்றி ராசா ராஜினாமா செய்து விட்டார்.
இப்பொழுது கூட, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல 'ஜனநாயகத்தை காப்பாற்ற ராஜினாமா' செய்ததாக ராசாவும், அவரது தலைவரும் கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக விடுத்த அழைப்பை, பிரதமரோ, சோனியாவோ இது வரை நேரடியாக நிராகரிக்கவில்லை. ஆனால், வீரப்ப மொய்லி, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் மட்டும், கருணாநிதிக்கு தன் விசுவாசத்தை தொடர்ந்து காண்பித்து வருகின்றனர்.
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ரூ. 1.76 லட்சம் கோடி பேரிழப்பைப் பற்றி கவலை பட வேண்டிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஊழலைத் தட்டிக் கேட்டால், தான் மற்றும் தன் கூட்டாளிகளின் பதவிகளுக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து, அழகிரி இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, காங்கிரஸ் - திமுக உறவு பலமாக இருப்பதாக திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்த ஊழல் பற்றி கிட்டதட்ட 2 ஆண்டுகளாக தெரிந்திருந்தும் ஏன் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுப்ரீம் கோர்ட் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியும், அவர் இன்னும் தெளிவான பதிலளிக்கவில்லை. தன் ஆட்சியில் இத்தனை பெரிய ஊழல் நடந்திருப்பதற்கு அவர் வெட்கப் படுவதாகவும் தெரியவில்லை.
இந்த ஊழலுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டியவர்கள், எதுவுமே நடக்காதது போல் மெளனம் காத்து வருகின்றனர். தன் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரால் நடத்தப் பட்டிருக்கும் இந்த ஊழலை தட்டிக் கேட்க வேண்டிய கட்சித் தலைவர் கருணாநிதியோ, தலித் என்பதால்தான் ஊழலை பெரிது படுத்துகின்றனர் என்று நாக்கு கூசாமல் நாடகம் ஆடி வருகிறார்.
திமுக ஊழல் செய்ததில் யாரும் வியப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், திமுகவின் ஸ்பெக்ட்ரம் ஊழலால் காங்கிரஸுக்கு மிகப் பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஊழல் செய்தவர் ராஜினாமா செய்து விட்டால் பிரச்சினை முடிந்து விட்டது என்று காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நினைக்க கூடாது. தன் சுயநலத்திற்காக நாட்டை சூறையாடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப் பட வேண்டும்.
குறுகிய கால லாபத்திற்காக ஊழல்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்களை இந்த நாடு ஒரு பொழுதும் மன்னிக்காது என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தன் வாழ்வுக்கும், வசதிக்கும் ஊழல்வாதிகளின் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தால், காங்கிரஸ் கட்சிக்கு பிகார் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் படு தோல்வி போல இன்னும் பல மோசமான தோல்விகள் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதை அக்கட்சி நினைவில் கொள்ள வேண்டும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





