maniyosai.com

You are here: Home செய்திகள் தலையங்கம் அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!!!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!!!

E-mail Print
Share/Save/Bookmark

hanging ropeசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தீர்ப்பு தமிழ்நாட்டில் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப் பட்டு 1991ம் ஆண்டு கைது செய்யப் பட்டனர். 1999ம் ஆண்டு குடிரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்ட இவர்களது கருணை மனு 12 ஆண்டு இழுத்தடிப்புக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதம் நிராகரிக்கப் பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான நாள் குறிக்கப் பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக சட்டசபையின் தலையீட்டினால் தண்டனை தற்காலிகமாக தள்ளிவைக்கப் பட்டுள்ளது. இருந்தாலும், தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்கு கயிறு எப்பொழுது கழுத்தை நெறுக்குமோ என்ற சூழ்நிலைதான் நிலவுகிறது.

இந்திய அரசியலைப்பு சட்டம் வழங்கியுள்ள 'கருணை மனு' என்ற அம்சம்தான் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எந்த மாதிரியான வழக்குகளுக்கு கருணை மனு சமர்பிக்கலாம், எந்த வழக்குகளுக்கு குடியரசுத்தலைவர் கருணை காண்பிக்கலாம், கருணை காண்பிக்கக் கூடாது உள்ளிட்ட கேள்விகளுக்கு தெளிவான வழிமுறைகள் இல்லை என்பதுதான் துரதிருஷ்டமான ஒன்று.

தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரும் கருணை மனுவை கிணற்றில் போட்ட கல் போல நீண்ட காலம் கிடப்பில் போட்டு விட்டு, திடீரென அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவு படக் கூறியுள்ளது.


(1) குறிப்பிட்ட வழக்கின் சமூகவியல் கூறுகளை, சிபாரிசு செய்வதற்கு முன், உள்துறை அமைச்சகம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

(2) வழக்கை சட்டப் படி ஆய்வு செய்வதோடு, மனிதாபிமான அடிப்படையிலும் ஆய்வு செய்ய வேண்டும். குற்றம் நடக்கும் காலக்கட்டத்தில் குற்றம்சாட்டப் பட்டவரின் வயதையும், மனநிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

(3) கருணை காண்பிக்கப் படும் குற்றவாளி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

(4) குற்றம்சாட்டப் பட்டவரின் குடும்ப பொருளாதார சூழல் கருத்தில் கொள்ளப் பட வேண்டும்.

இவ்வாறு கருணை மனுக்கள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவரது பதவிக் காலத்தில் சில அறிவுறைகளை வெளியிட்டார்.

இந்த அறிவுறைகளின் அடிப்படையில் பார்த்தால் கூட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு 'கருணை' நிராகரிப்பட போதுமானக் காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை.

பேரறிவாளனைப் பொறுத்த வரை சிறையில் இருந்த படியே திறந்தநிலை பல்கலைக்கழகம் மூலம் பி.சி.ஏ. பட்டப் படிப்பு படித்துள்ளார். தற்போது எம்.சி.ஏ. படித்து வருகிறார்; முருகன், எம்.சி.ஏ. படித்து முடித்தே விட்டார். சாந்தன், சிறையில் இருந்த படி எழுதிய 13-5-2009 என்ற புதினம் பரவலாக பாராட்டப் பட்டுள்ளது. 20 ஆண்டுகால சிறை வாச காலக்கட்டத்தில் மூவரின் நடத்தையின் மீதும் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப் படவில்லை.ஆக, இவர்கள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடுவார்கள் எனக் கருதுவதில் நியாயம் இல்லை.

மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றியே ஆக வேண்டும் என கூறுபவர்கள் அதற்கு காரணமாக ராஜீவ் காந்தி கொலையை மட்டுமே கூறுகின்றனர். கொல்லப் பட்டது 'ராஜீவ் காந்தி'யாக இல்லாமல் குப்பனாகவோ, சுப்பனாகவோ இருந்திருந்து, அவர்களை கொன்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் கருணை காண்பித்திருந்தால், அவர்களது நிலைபாடு என்னவாக இருந்திருக்கும்? ராஜீவ் காந்தியை கொன்றால் கருணை காண்பிக்க முடியாது; வேறு எவனையோ கொன்றால் கருணை காண்பிக்கப் பட வாய்ப்புண்டு என்ற சூழ்நிலை ஜனநாயக நாட்டில் நிலவுவது சரிதானா? ஆக, தற்போது இந்த வழக்கில், ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டுபவர்கள், 'கருணை காட்டுதல்' என்ற குடியரசுத் தலைவரின் உரிமையை கேள்வி கேட்பதுதானே நியாயம்?

மேலும், இவர்கள் கருணை காண்பிக்கப் பட தகுதியற்றவர்கள் என குடியரசுத் தலைவர் எந்த அடிப்படையில் தீர்மானித்தார்? சட்டத்தின் அடிப்படையில் மட்டும் கருணை வழங்கப் பட சாத்தியம் உண்டு என்றால், நீதிமன்றங்கள் எதற்கு? பல வருட விசாரணைகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் வழங்கப் படும் ஒரு தீர்ப்பை, 'குடியரசுத் தலைவர்' என்ற தனிநபர் தன்னிச்சையாக மாற்றுவது சரியான நடைமுறையா? சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்பது போல இத்தனை குழப்பங்களுக்கு ஆளாக சாத்தியம் உள்ள 'கருணை மனு' என்ற அம்சம் அரசியலமைப்பு சட்டத்தில் இன்னும் நீடிக்கதான் வேண்டுமா?

ராஜீவ் காந்தி கொல்லப் பட்டார் என்பதற்காக அவர்களது குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில், பாரபட்சத்துடன் இந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன என்ற பொதுமக்களின் ஆதங்கத்தை குடியரசுத் தலைவர் எவ்வாறு மறுக்கப் போகிறார்? பொதுமக்களின் மேற்குறிப்பிட்ட ஆதங்கம் சரியென்றால், தனி நபர் விருப்பு வெறுப்பிற்காக மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படாத 'குடியரசுத் தலைவர்' என்ற தனி நபர், உயிர்கள் மாய்வதற்கு காரணமாக இருப்பது உண்மையான ஜனநாயகம் ஆகுமா?

அனைத்திற்கும் மேலாக, இன்னார்க்கு கருணை காட்டலாம்; இன்னார்க்கு கருணை காட்ட முடியாது என 'கருணை' என்ற கடலை, குடுவையில் அடக்க முடியுமா?

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 March 2012, 11.02 தலைப்புச் செய்திகள்
பிரதீபா பாட்டீலின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.205 கோடி செலவு
புதுதில்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் வெளிநாட்டு...மேலும்...
0 Comments , 48 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits