அமெரிக்க டாலர், யூரோ, பிரிட்டிங் பவுண்ட் மற்றும் யெண் என உலகின் முக்கியமான கரண்சிகளுக்கு பிரத்தியேக சின்னம் இருப்பது போல, இந்திய ரூபாய்க்கும் பிரத்தியேகமான சின்னத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சின்னத்தை ஐஐடி மாணவரான உதய்குமார் வடிவமைத்துள்ளார். இதற்கு, அவருக்கு 2.5 லட்சம் பரிசுத் தொகை வேறு கிடைத்துள்ளது.
சர்வதேச அளவில் நான்கே நான்கு கரண்சிகளுக்கு மட்டுமே இது வரை பிரத்தியேக குறியீடு இருந்தது. இப்பொழுது அந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பது பெருமையே. அதிலும், இந்த குறியீட்டை வடிவமைத்த உதய்குமார் ஒரு தமிழர் என்பது நமக்கு கூடுதல் பெருமை.
இருப்பினும், இந்தக் குறியீட்டை மனமுவந்து அனைவரும் ஏற்றுக் கொள்வதில் சில சங்கடங்கள் உள்ளன.
அனைத்து எழுத்துக்களுக்கு மேலும் கோடு இருப்பது தேவனகிரி எழுத்தின் சிறப்பம்சம். தேவனகிரி எழுத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் எழுதுகின்றனர். இந்த தேவனகிரி எழுத்தில் ‘ர’ என்ற எழுத்தை எழுதி விட்டு, அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு, பக்கவாட்டில் ஒரு கோட்டை போட்டு விட்டால் இந்திய கரண்சியின் குறியீடு வந்து விடுகிறது. இந்தியாவின் மூவர்ணக் கொடியின் குறியீடாகவே பக்கவாட்டு கோடு அமைந்திருப்பதாக உதய்குமார் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில், இந்தி, மராத்தி போன்ற மொழிகள் மட்டும் பேசப் படுவதில்லை. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய திராவிட மொழிகளை பேசுபவர்களும் அதிக அளவில் உள்ளனர். அதனால், தேவனகிரி எழுத்தில் நாட்டின் கரண்சியின் குறியீடு வடிவமைக்கப் பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும். இதை விட அப்பட்டமான இந்தி திணிப்பு வேறெங்கும் பார்க்க முடியாது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவதை பார்த்து இந்திய இறையாண்மையே கேள்விக்குறி ஆகி விட்டதாக பலர் கருதும் இந்த தருணத்தில், இதைப் போன்ற ஒரு இந்தி திணிப்பு மேலும் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்காதா? அனைத்து மொழி பேசுபவர்களுக்கும், அனைத்து மதத்தினருக்கும், அனைத்து ஜாதியினருக்கும் பொதுவான ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்திருந்தால் வரவேற்கத் தக்கதாக இருந்திருக்கும்.
மேலும், இப்பொழுது வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்திய ரூபாய்க்கான சின்னம், கம்யூனிஸ்டுகளின் சின்னமான அரிவாள் மற்றும் சுத்தியலை நினைவு படுத்துவது போல் உள்ளது. இதனால், இந்தியா கம்யூனிஸ கொள்கைகள் கொண்ட நாடு என்று வெளிநாட்டவர்கள் தவறாக புரிந்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
இந்திய ரூபாயின் குறியீட்டின் விஷயத்தில் இருக்கும் இதைப் போன்ற சில குறைகளை களைய மத்திய அரசு முன்வந்தால் மனமுவந்து பாராட்டியிருக்கலாம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


