சமச்சீர் கல்விக்காக ஏதோ திமுக போராடியது போலவும், அதிமுக அரசு பணக்காரர்கள் படிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு சமச்சீர் கல்வியை தடுக்க நினைப்பது போலவும் ஒரு மாயத் தோற்றம் இன்று பலராலும் உருவாக்கப் பட்டு வருகிறது.
உண்மையை சொல்லப் போனால் 'சமச்சீர் கல்வி' என்பது கருணாநிதியின் மற்றொரு நாடகமே. கருணாநிதி நினைத்திருந்தால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை ஒட்டுமொத்தமாக தடை செய்திருக்க முடியும். அவ்வாறு செய்யாமல் சமச்சீர் கல்வி என்ற பெயரில் ஒன்றை அறிமுகப் படுத்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களும் அதைதான் படிக்க வேண்டும்; அரசு பள்ளி மாணவர்களும் அதைதான் படிக்க வேண்டும் என சொல்வதில் எந்த லாஜிக்கும் இருப்பது போல் தெரியவில்லை.
தனியார் பள்ளிகளை தடை செய்தால், தானாகவே அனைத்து மாணவர்களும் ஒரே தரத்திலான கல்வியை கற்க கூடிய சம நிலை ஏற்பட்டு விடுமே? முன்னாள் முதல்வர் ஏன் அதை செய்யவில்லை?
மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வியில் ஒரு மைனாரிட்டி அரசால் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வர முடியும் என்ற நிலை இருக்கும் போது, அதனை அமல்படுத்த மெஜாரிட்டி பலம் உடைய அரசுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்க முடியாதா?
கல்வியில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு முன் அதன் தரத்தை முழுமையாக ஆராய ஒரு மாநில அரசுக்கு உரிமை இல்லையா? சமச்சீர் கல்வியை அடுத்த கல்வியாண்டில் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப் படும் என மாநில அரசு கூறியுள்ள நிலையில், அரசுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் என்ன ஆகி விடும்? இத்தனை நாட்கள் பழைய பாடத்திட்டத்தில் பயின்று வந்த மாணாக்கருக்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி படிக்காமல், பழைய பாடத்திட்டத்திலேயே தொடர்வதால் ஏதாவது மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடுமா?
தமிழக அரசு, தான் கூறியதைப் போல அடுத்த ஆண்டும் சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த தயங்கினால் அப்பொழுது நீதிமன்றத்தை அணுகலாமே! மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப் பட்டு விட்டதாக நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள், பள்ளி திறக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில் நீதிமன்றத்திற்கு சென்றது ஏன்? ஒரே வாரத்தில் 'நீதி' கிடைத்து விடும் என்ற எண்ணமா? வழக்கு தொடுக்கும் போது எதிர்தரப்பு மேல்முறையீடு செய்யும்; அதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப் படும் என ஏன் அவர்கள் சிந்திக்கவில்லை? ஒரு வேளை, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தால், அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் மேல்முறையீடு செய்திருக்க மாட்டார்களா? சட்டம் அவர்களுக்கு அளித்திருக்கும் உரிமையை, எதிர்தரப்புக்கும்தானே அளித்துள்ளது? அப்படியிருக்கு அரசு மேல்முறையீடு செய்ததை குறை கூறுவது ஏன்?
மேலும், பெரும்பான்மை பலமுடைய மாநில அரசு, கல்வி குறித்து எடுக்கும் கொள்கை முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கு எந்த அளவு அதிகாரம் உண்டு?
சமச்சீர் கல்வி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே, மாணவர்களை வைத்து ஆங்காங்கே சிலர் போராட்டம் நடத்தி வருவதாகவும், வகுப்பில் இருந்து மாணவர்களை வலுகட்டாயமாக வேன்களில் ஏற்றி போராட்டம் நடத்த அழைத்து செல்வதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றனவே. மாணவர்களை இவ்வாறு தூண்டுபவர்களுக்கு, கல்வி குறித்து உண்மையான அக்கறையா அல்லது தான் சார்ந்த கட்சி மண்ணை கவ்வியதால் ஏற்பட்டுள்ள விரக்தியின் வெளிப்பாடா?
நடுநிலையாளர்கள் உள்ளத்தில் எழும் இத்தனை கேள்விகளுக்கு யார் பதில் கூற போகிறார்கள்?
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





