தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியாகி புது அரசு ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிட்டது. இந்த ஆட்சி மாற்றத்தை சிலர் கூறுவதுப் போல வழக்கமான ஒன்றாக பார்க்க முடியாது. ஐந்து வருடம் திமுக என்றால் அடுத்த ஐந்து வருடம் அதிமுக என்பது இயல்புதானே என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த தேர்தல் முடிவுகள் ஆட்சியாளருக்கு உணர்த்தும் விஷயங்கள் நிறையவே இருக்கிறது.முதலில் மக்கள் ஊழலுக்கு எதிரானப் புரட்சிக்கு தயாராகி வருகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழலுக்கு எதிராக செயல்படும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்க குறிப்பிட்ட கைபேசி எண்ணுக்கு குவிந்த மிஸ்டு கால்களே இதற்கு ஆதாரம்.
கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் இதற்கு முன் எப்பொழுதுமே இல்லாத அளவிற்கு குடும்ப ஆதிக்கம் கொடிக்கட்டிப் பறந்தது. மக்கள் நலதிட்டங்களுக்காக, தமிழக மீனவர்கள் நல்வாழ்விற்காக என பல முக்கியமான விஷயங்களுக்கு எல்லாம் புறா காலில் ஓலைக் கட்டி அனுப்பிய நம் முன்னாள் தமிழக முதல்வர் தன் மகனுக்கு அமைச்சர் பதவியைக் கேட்டு வாங்க தானே டில்லிக்கு நேரில் சென்றார். இந்த நடவடிக்கைகள் அவருக்கு தமிழ் மக்களை விட தன் மக்கள் மீதுதான் அதீத அக்கறை என புரியவைக்கத் தொடங்கியது. இங்கே தமிழ்நாட்டில் பெரும்பாலான டிவி சேனல்கள் திமுக குடும்ப சேனல்களாகவே இருக்கலாம். ஆனால் வட இந்திய ஊடகங்கள் இதை கிண்டலடித்தாலும் அவர் அசரவில்லை. ஒவ்வொரு துறையிலும் அவரது குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இதுநாள் வரை இப்படி ஒரு மகன் அல்லது மகள் இருக்கிறார் என்பதே கூட மக்கள் கவனத்திற்கு வராமல் ஒதுங்கி இருந்தவர்களெல்லாம் கூட வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்து விட்டார்கள். தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்பதை நிரூபித்தனர் கருணாநிதி குடும்பத்தினர்.
அடுத்ததாக மின்வெட்டு. இது யாரும் எடுத்துக் கூறியோ, மறைத்தோ மக்கள் உணர வேண்டியதில்லை. இதனால் அனைத்து தட்டு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். எப்பொழுதும் பிற மாநிலங்களில்தான் மின்வெட்டு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் எப்போதாவது கரண்ட் 'போகும்' என்றிருந்தது. அந்நிலை மாறி தமிழகத்தில் எப்போதாவது கரண்ட் 'வரும்' என்ற நிலை வந்துவிட்டது. ஒரு நாளுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 2 அல்லது 3 மணி நேரம். அறிவிக்கப்படாமல் பல மணி நேரங்கள் என தமிழ்நாடே இருளில் மூழ்கியது. அத்தோடு விலைவாசி உயர்வு வேறு.
எம் ஜி ஆர் அவரது பாடலில் கூறியது போல, ‘அண்ணாந்து பார்க்கிற மாளிகைக் கட்டி அதன் அருகினில் ஓலைக் குடிசைக் கட்டி; பொன்னான உலகென்று பெயரும் இட்டால் இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்.’ என்ற வரிகளின் உண்மை, சாதாரண மக்கள் வெங்காயம் கிலோ நூறு ரூபாய் கொடுத்து வாங்கி வரும் வேளையில், எத்தனை சைபர் என்று கூட தெரியாத அளவிற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் நடத்தி வாயைப் பிளக்க வைத்தப் போது உணர முடிந்தது.
மக்களுக்கு தேவை இலவசங்கள் அல்ல. இன மற்றும் மொழிப் பெருமை அல்ல. கையில் காசில்லாதவனுக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆக இருந்தால் என்ன; தை 1 ஆக இருந்தால் என்ன? மக்களின் தேவை வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம் போன்றவைதான்.
திமுக ஆட்சியில் அளித்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியில் கலைஞர் டிவி மட்டுமின்றி மற்ற சேனல்களும் வரும். மக்கள் சீரியல் தவிர (மற்ற சேனல்) செய்திகளையும் பார்ப்பார்கள் என்பதை மறந்து விட்டார் போலிருக்கிறது. எழுதப் படிக்க தெரியாதவர்கள் கூட இலவச டிவியில் கருணாநிதி டில்லிக்கு செல்வதையும் அவர் கட்சியினர் ஊழலில் சிக்கி கோர்ட்டுக்கும் சிறைக்கும் செல்வதையும் வீட்டில் வேர்கடலை கொறித்தவாறே அமைதியாக பார்த்து வந்தனர். தேர்தலில் தங்களது ஆற்றலை மிகச் சரியாக வெளிப்படுத்திவிட்டனர். மக்களின் விரல் நுனியில்தான் ஆட்சியாளர்களின் எதிர்காலம் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டனர். அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளவே எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் மக்கள் வாக்களித்துவிட்டனர்.
இந்த தேர்தல் முடிவுகள் மக்கள் ஜாதி, மதம், பணம், இலவசங்கள் எதற்கும் மயங்கமாட்டார்கள் என பறைச்சாற்றியிருக்கிறது. திமுக இவைகளையே அதிகம் நம்பியிருந்தது. அதனால்தான் வன்னியர் ஓட்டுக்காக பாட்டாளி மக்கள் கட்சி, தலித் மக்கள் ஓட்டுக்காக விடுதலை சிறுத்தைகள் என ஜாதிக் கட்சிகளுக்கு தொகுதிகளை வாரி வழங்கியது. இலவச பொருட்கள் மற்றும் திருமங்கல ஃபார்முலாப்படி ஓட்டுக்கு பணம் என்றெல்லாம் தேர்தல் வியூகம் வகுத்தது. ஆனால் இது எதுவும் தேவையில்லை என மக்கள் முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தி விட்டனர்.
இல்லாவிட்டால் திமுக எதிர்கட்சியாக இருக்கக் கூட முடியாத அளவிற்கு இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்திருக்காது. ஜாதிப் பெயரை சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளில் பாமகவின் 3 இடங்களைத் தவிர மற்ற அனைத்திலும் தோல்வியையேத் தழுவியுள்ளது.
மக்களுக்கு தேவை அடிப்படை வசதிகள் மற்றும் நல்வாழ்வு. தேர்தல் சமயத்தில் ஒரு ஓட்டுக்கு இத்தனை எனக் கொடுக்கும் பணத்தையெல்லாம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் வகையில் பல நலதிட்டங்களுக்காக செலவு செய்து வந்தால் தேர்தல் சமயத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் கூடஇல்லை. அவர் எந்த் கட்சியில் இருந்தாலும் மக்கள் அவர்களை ஜெயிக்கவைப்பார்கள்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




