தன்னை அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவமதித்ததாகக் கூறி அந்த கூட்டணியில் இருந்து விலகும் முடிவை வைகோ எடுத்து விட்டார். தன்னுடைய முடிவு வேறு அணிக்கு சாதகமாக ஆகி விட கூடாது என்பதால் மதிமுக, தேர்தலை புறக்கணிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
வைகோவை இத்தனை நாட்கள் சீண்டாதவர்கள் கூட இப்பொழுது அவருக்கு ஆதரவு கரம் கொடுக்க துடிப்பவர்கள் போல பாசாங்கு செய்கிறார்கள். ஈழத் தமிழனுக்கு அப்பட்டமாக துரோகம் செய்தவனெல்லாம் கவிதை எழுதி வைகோவுக்கு தூது விடும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலி நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக வீரமணி, கார்த்திக் போன்றோரெல்லாம் துக்கம் விசாரிக்கும் நிலைக்கு வைகோ வந்து விட்டதை நினைக்கும் போது சங்கடமாகதான் உள்ளது.
தன்னை ஜெயலலிதா அவமான படுத்தி விட்டதாகவும், காலம் தந்த படிப்பினையால் அவர் மாறியிருப்பார் என தான் நினைத்ததாகவும், ஆனால் அவருடைய ஆணவ போக்கு மாறவில்லை எனவும் கன்னம் துடிக்க, நா தழுதழுக்க உணர்ச்சி பெருக்குடன் கர்ஜித்துள்ளார் வைகோ.
கூட்டணி குறித்து நடந்த தன் கட்சியின் கூட்டத்தில் 54 பேர் பேசியதாகவும், அதில் 48 பேர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என சொன்னதாகவும், 4 பேர் தனித்து போட்டியிடுவோம் என சொன்னதாகவும், 2 பேர், இருபது சீட்டுகளை வாங்கி கொண்டு அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என சொன்னதாகவும் வைகோ தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், தொண்டர்களின் கருத்தை மீறி தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், 10 பேராவது தீ குளிப்பார்கள் எனக் கூறியுள்ள வைகோ, அந்த அளவு சுயமரியாதையுடைய தன் தொண்டர் கூட்டத்தை 'பிரிகேட்' போன்றவர்கள் என வர்ணித்துள்ளார் வைகோ.
வைகோவின் பேச்சும், அவரது தற்போதைய செயலும் பொது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை. அவரே பேட்டியில் கூறியதைப் போல, கணிணி இயக்கும் இளைஞர்கள் முதல் விவசாயம் செய்யும் கிராமத்தவர்கள் வரை வைகோவை பாராட்டி வருகிறார்கள்.
ஆனால், சில விஷயங்களை வைகோ மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. சுயமரியாதை மிக்கவர்கள், மானஸ்தர்கள், கட்டுகோப்பானவர்கள் என மதிமுக தொண்டர்களை இவர் மெச்சி கொள்ளலாம். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப் போல தன் கட்சியினர் மீது கண் மூடிதனமாக நம்பிக்கை வைக்க அவருக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால், கடந்த சில மாதங்களில் எத்தனை பேர் இவரது முதுகில் குத்தி விட்டு திமுகவில் இணைந்துள்ளனர்? என்பதை வைகோ ஞாபகத்தில் கொள்ள வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் போன்றோரே திமுகவுக்கு தாவினார்களே. அவர்கள் மதிமுகவில் இருந்த போது சுயமரியாதை உள்ளவர்கள், கட்டுகோப்பானவர்கள் என அவர்களையும் வைகோ கருதி இருந்திருப்பாரே! அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், எதிர்காலத்தில், அதாவது, அதிமுக ஆட்சி அமைத்த பின்னோ, அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ, அதே போல மதிமுகவில் இருந்து திமுகவுக்கு யாரும் சென்றிருக்க மாட்டார்கள் என்று வைகோவால் வாக்குறுதி அளிக்க முடியுமா? அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அவர்கள் வைகோ மீது வைத்திருக்கும் நம்பிக்கையை, அவரது கட்சியினர் மீதும் வைத்திருக்க வேண்டும் என வைகோ நினைப்பது எந்த வகையில் நியாயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
வைகோ தேர்தலை புறக்கணித்ததும் மிக சரியான முடிவு என்று கருதி விட முடியாது. ஒரு கூட்டணியில் இருந்து வெளிவந்த பிறகு வாக்கு சிதறுவது பற்றி அவர் ஏன் சிந்திக்க வேண்டும்? அதிமுகவில் சீட் கிடைத்திருந்தால் தேர்தலில் போட்டியிடுவோம் அல்லது தேர்தலை புறக்கணிப்போம் என்று சொன்னால், மதிமுக என்ற தனி கட்சி இருப்பதன் அவசியம் என்ன என்ற வினா எழுவதில் தவறிருக்க முடியாதே.
மதிமுக தனியாக தேர்தலை சந்தித்திருந்தால், எத்தனை வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும், எத்தனை தொகுதிகளை தாங்கள் கைபற்றலாம் என்று சுயபரிசோதனை செய்ய அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமே. ஒரு தடவை தங்கள் பலத்தை காட்டி விட்டால், அதிமுக போன்ற கட்சிகள் எதிர்காலத்தில் மதிமுகவை அவமானப் படுத்தும் நிலை ஏற்படாதே.
தோற்றாலும் பரவாயில்லை என 2006 முதல் அனைத்து தேர்தல்களையும் தேமுதிக தனித்து நின்று சந்தித்ததால்தான் அவர் மீது ஓரளவாவது நம்பிக்கை அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கும். தேர்தலே வேண்டாம் என ஒதுங்கினால் என்ன பயன்?
மேலும், வைகோவின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால், அவர்களது அபிமானிகளுக்கு குழப்பம்தான் மிஞ்சும். தலைவரை தற்போது காயப் படுத்திய அதிமுகவுக்கு எதிராக வாக்களிப்பதா, அல்லது முன்பு பல முறை அவமானப் படுத்திய திமுகவுக்கு எதிராக வாக்களிப்பதா என்ற மாபெரும் குழப்பத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடுமே. அதிமுக மேல் உள்ள கோபத்தால், அவர்கள் திமுகவுக்கு வாக்களித்தால், அது அவர் பயந்தது போல் வேறு யாரோ வெற்றி பெற வழி வகுத்து விடுமே. அதற்கு தேர்தலில் போட்டியிட்டே அவர் வாக்குகளை பிரிக்கலாமே.
ஆக உணர்ச்சி பெருக்கில் முடிவை எடுக்காமல் வைகோ சற்று நிதானத்துடன் முடிவெடுத்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





