புதுதில்லி: மம்தா பானர்ஜிக்கு ரயில்வே துறையின் முதன்மையான கோப்புகளை அனுப்ப ஓராண்டில் ரூ.11 லட்ச ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளதாம்.
கடந்த ஓராண்டாக அமைச்சரவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் கோல்கத்தாவிலேயே தங்கியுள்ளார், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மாநில அரசியலில் அதிக கவனம் செலுத்துவதற்காக கோல்கத்தாவிலேயே நிரந்தரமாக தங்கியுள்ளார் மம்தா பானர்ஜி.
இதனால் ரயில்வே துறை சம்மந்தப் பட்ட முக்கியமான கோப்புளை தில்லியில் இருந்து கோல்கத்தாவில் தங்கியிருக்கும் மம்தாவுக்கு விமானத்தில் அனுப்பி வருகின்றனர். இந்தக் கோப்புகளை மம்தாவிடம் சேர்ப்பிக்க செல்லும் அதிகாரிகளின் விமான செலவு மட்டும் கடந்த ஓராண்டில் ரூ.11 லட்சத்தை தாண்டி விட்டதாம்.
மம்தாவிடம் கோப்புகளை சேர்ப்பிக்கும் பணி, ரயில்வே அமைச்சரின் சிறப்பு பணி அதிகாரி கெளதம் சன்யால், தனிச் செயலாளர் சாந்தனு பாசு, செயல் இயக்குநர் சஹா, கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக், உதவி முதன்மைச் செயலாளர் ரத்தன் முகர்ஜி ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ளது.
இவர்களில், கெளதம் சன்யால்,சாந்தனு பாசு, அசோக் ஆகியோரின் விமான பயணங்களுக்கு மட்டும் 2009ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2010ம் ஆண்டு ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.8,73,946 ரயில்வே துறையால் செலவழிக்கப் பட்டுள்ளது.
சஹா மற்றும் முகர்ஜியின் விமான பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்பதை ரயில்வே துறை தெரிவிக்கவில்லை. இந்த தகவல்கள் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





