பாளையங்கோட்டை : கூடங்குளம் அணு மின்நிலையம் அமைக்கும் விவகாரத்தில் பிடிவாதம் பிடித்தால் பிடி வாரண்ட்தான் கிடைக்கும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், கூடங்குளம் அணு மின்நிலையத்தை விரைவில் அமைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பாக காங்கிரஸ் நடத்திய பொதுகூட்டத்தில் நேற்று (பிப்.4) கலந்துக் கொண்டு சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் மின் தேவைக்கு அணுசக்தி மிகவும் அவசியம். மின் பற்றாக்குறை நிலவினால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கும்.
இந்தியாவால் ஆண்டுக்கு 78 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை. ஆனால், சீனாவோ, கூடுதலாக ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அதன் காரணமாக, இந்தியாவை விட சீனா அனைத்து மட்டத்திலும் முந்தி வருகிறது.
சூரிய சக்தியையும், காற்றாலைகளையும் வைத்து தொழில் துறைக்கு தேவையான மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக போராட்ட நடத்தி வருபவர்களுக்கு பணம் எவ்வாறு வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தவறு செய்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவார்கள்.
ஒரு விவகாரம் தொடர்பாக வாதம் செய்யலாம், பிடிவாதம் செய்ய கூடாது. பிடிவாதம் செய்பவர்களுக்கு பிடி வாரண்ட்தான் கிடைக்கும் என என் நண்பர் அடிக்கடி சொல்வார். அப்படி யாரையும் மிரட்டி அடிபணிய வைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
கூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப் படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. இதன் மூலம் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி விரைவில் துவங்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app





