புதுதில்லி: பெட்ரோல், டீசல், மண்ணெணெய், எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.75 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாயும், எரிவாயு உருளை விலை 35 ரூபாயும் மத்திய அரசால் நேற்று (ஜூன் 25) அதிகரிக்கப் பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும், எதிர்கட்சிகள் மற்றும் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஜூன் 26) இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல போராட்டங்கள் நடத்தப் பட்டன.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டை பொறுத்த வரை, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆளுங்கட்சியான திமுக பெயரளவில் எரிவாயு விலை உயர்வை எதிர்த்தாலும், செம்மொழி மாநாடு நடைபெற்று வருவதால் பெரிய அளவில் கண்டு கொள்ளவில்லை. அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்டக் கட்சிகள் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எரிவாயு விலை ஏற்றத்துக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்த எந்த கட்சியும் தயாராக இல்லை எனத் தெரிகிறது.
மே.வங்கம்:
சிஐடியு வர்த்தக சங்கம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதால், மேற்க வங்க மாநிலத்தில் இன்று (ஜூன் 26) பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் என பொது போக்குவரத்து வாகனங்கள் எவையும் ஓடவில்லை. சில தனியார் டாக்சிகள் ஓடினாலும், அதிக விலையை கேட்டு மக்களை துன்புறுத்தின.
தனியார் கார்களுக்கும், மெட்ரோ ரயில்களுக்கும் விலக்கு அளிக்கப் பட்டிருந்ததால் அவை வழக்கம் போல் ஓடின.
கேரளா:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததால், கேரளாவிலும் இன்று (ஜூன் 26) இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா:
பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே தலைமையில் இன்று (ஜூன் 26) மும்பையில் கண்டன பேரணி நடத்தப் பட்டது. இதே போல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பாஜகவினர் கண்டன பேரணி நடத்தினர்.
ஆந்திர பிரதேசம்:
எரிவாயு விலை ஏற்றத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஆந்திராவில் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பிரஜா ராஜ்ஜியம் தலைவர், நடிகர் சிரஞ்ஜீவி விஜயவாடாவில் கண்டன பாதயாத்திரை நடத்தினார்.இதே போல, கம்யூ. கட்சியினரும் விஜயவாடாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுரா:
எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து திரிபுரா மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் திங்கள் கிழமையன்று 12 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app




