லக்னோ: எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையில் உத்திர பிரதேச மாநிலத்தை நான்காக பிரிப்பதற்கான தீர்மானம் அம்மாநில சட்டசபையில் இன்று (நவ.21) நிறைவேறியது.
உத்திரபிரதேச மாநிலத்தில் 75 மாவட்டங்கள் உள்ளதால்தான் மாநிலம் வளர்ச்சி அடையாமல் உள்ளது எனக் கூறி அம்மாநிலத்தை பூர்வான்சல், பந்தல்காண்ட், ஆவாத் பிரதேஷ், பச்சிம் பிரதேஷ் என நான்கு சிறிய மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மாயாவதி கடந்த வாரம் அறிவித்தார்.
அவரது இந்த அறிவிப்புக்கு சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பும் இல்லை, ஆதரவும் இல்லை என பாஜக கூறியுள்ளது.
உ.பி. சட்டமன்றத்திற்கான தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற மாயாவதி அவசரம் காட்டி வருகிறார். அவரது பகுஜன் சமாஜ் கட்சி 219 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளதால், சர்ச்சைக்குரிய இந்த தீர்மானத்தை எளிதில் நிறைவேற்றி விடலாம் என்பது அவரது நம்பிக்கை.
இந்நிலையில், இன்று காலை (நவ.21) அம்மாநில சட்டபேரவை கூடியதும், தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். கையில் மாயாவதி அரசுக்கு எதிரான பதாகைகளைக் கொண்டு வந்திருந்த அவர்கள், முதல்வருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை ஒத்தி வைக்கப் பட்டது.
மீண்டும் மதியம் 12.15 மணியளவில் கூடிய சட்டசபை, எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி மாநிலத்தை பிரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




