திண்டிவனம்: கலைஞர் தன்னை பார்த்து பயப்படுவதாக தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது:
சில அரசியல்வாதிகள் என்னை பற்றி ஏதேதோ பேசி வம்புக்கு இழுக்கின்றனர். அவர்களுக்கு பதில் சொல்லும் வாய்ப்பாக இந்த திருமண விழா அமைந்துவிட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு பின் வந்தவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் எந்த வகையில் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள்? தற்போது விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் என்று கலைஞர் கூறுகிறார். மின்சாரம் இல்லை அதனால்தான் கொடுக்கிறார்.
தமிழ்நாட்டில் 62 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் கலைஞர், 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்ததாக கூறுகிறார். இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்காக எந்த திட்டத்தையாவது கலைஞர் கொண்டு வந்துள்ளாரா? கலைஞருக்கு என்னைப் பார்த்து பயம். நான் உங்களிடம் கூட்டணிக்காக என்றைக்காது தூது விட்டேனா? நான் கூட்டணி குறித்து இது வரை பேசவில்லையே?
வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் நல்ல கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன். 2 கட்சிகளும் ஊழல் செய்துள்ளன. தேமுதிகவிடம் ஆட்சியை ஒரு முறை ஒப்படைத்துப் பாருங்கள்...
இவ்வாறு நடிகர் விஜயகாந்த் பேசினார்.
அண்மையில், திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் ஊழல் கட்சிகள் என விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி விஜயகாந்த் கறுப்பு பணம் வைத்திருப்பதை சுட்டிக் காட்டினார். இந்நிலையில், மீண்டும் திமுக, அதிமுகவை விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






