மும்பை: மும்பையில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு (ஆக.27) புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் என்ஜினிலிருந்து திடீரென புகை கிளம்பியதால், அந்த விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
நேற்றிரவு (ஆக.27) 9 மணிக்கு மும்பையில் இருந்து சென்னைக்கு 9W-2302 ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில், 139 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்டு சில நொடிகளிலேயே விமானத்தின் இடது எஞினில் இருந்து புகை வருவதை சில பயணிகள் கவனித்தனர்.
உடனடியாக, விமானிக்கு தகவல் அளிக்கப் பட்டது. விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கோரினார். விமானம் பத்திரமாக தரையிறக்கப் பட்டது.
விமானத்தில் இருந்து பயணிகள் இறங்க ‘நகரும் படிக்கட்டு’ தயார் நிலையில் இருந்தது. படிக்கட்டு பொருத்தப் படுவதற்குள் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்று கருதிய சில பயணிகள், விமானத்தில் இருந்து கீழே குதிக்க முற்பட்டனர். இதில் 25 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதில், எலும்பு முறிவு ஏற்பட்ட 2 பயணிகள் தனியார் மருத்துவமனையிலும், 10 பயணிகள் நானாவதி மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். காயமடைந்த மற்ற பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவர் குழு முதலுதவி அளித்தது.
அவசரமாக தரையிறக்கப் பட்ட விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் சோதனை செய்தனர். ஆனால், என்ஜினில் புகை வருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
பின்னர், மற்றொரு விமானம் மூலம் 117 பயணிகள் மும்பையில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|






