புதுதில்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவ்ர் சுப்ரமணிய சுவாமி கொடுத்திருந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி இன்று (பிப்.4) தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் அப்போதைய நிதியமைச்சரும், தற்போது உள்துறை அமைச்சராக இருப்பவருமான ப.சிதம்பரத்தை, முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவோடு குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கில், இந்தத் தீர்ப்பை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
முன்னதாக சுப்ரமணிய சுவாமி கொடுத்திருந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் சேர்ப்பதா வேண்டாமா என்பதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும் என்று உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ப சுப்ரமணிய சுவாமியின் மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் இன்று (பிப்.4) இந்த உத்தரவை பிறப்பித்தது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மிகுந்த ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது.
சுவாமி விரைவில் மேல்முறையீடு...
சிறப்பு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு தனக்கு ஆச்சரியம் தருவதாகக் குறிப்பிட்ட சுப்ரமணிய சுவாமி மேலும் கூறுகையில் "இந்தத் தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனாலும் இதுபற்றி நான் கவலைப்படவில்லை
ப.சிதம்பரத்துக்கு எதிராக இன்னும் அதிகமான ஆதாரங்களுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடுவேன். அத்துடன், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகுவது பற்றி பரிசீலித்து வருகிறேன்.
முதலில் ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களைத் தருவேன். பிறகு, சோனியாவுக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிப்பேன். இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை நிச்சயம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பேன்," என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



