சென்னை: தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவி ஏற்றபின் ஆறாவது முறையாக அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. தற்போது இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய (ஜன-26) அறிவிப்பின்படி அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சர் பதவிகளை இழந்துள்ளனர்.
காலியான இடங்களை என்.ஆர்.சிவபதி மற்றும் முக்கூர் என்.சுப்ரமணியன் ஆகியோர் நிரப்புகின்றனர்.
அதிமுக அமைச்சரவை பட்டியலில் மூத்த அமைச்சர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துவரும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வருவாய் துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை செங்கோட்டையன் வேளாண் அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சிராபள்ளி மாவட்டம் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான என்.ஆர்.சிவபதி சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அவர் வகித்துவந்த கால்நடை துறை அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் தற்போது மீண்டும் அமைச்சரவையில் இணைக்கப்படுகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான என்.சுப்ரமணியம் தற்போது அமைச்சரவையில் இணைக்கப்படுகிறார். அவருக்கு தகவல் தொழில்நுட்பம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவபதிக்கு பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் இன்று (ஜன-27) மாலை பதவி ஏற்றுக்கொள்வார்கள். ராஜ் பவன் செய்திக் குறிப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் அதிமுக அமைச்சரவை ஆட்சி அமைத்தபோது திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்திலிருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டார். ஜூலை மாதம் அவரது துறை மாற்றப்பட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சரானார். ஒரு வாரம் முன்பு அவர் மீண்டும் பதவி மாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரானார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் முறையாக சட்டமன்ற உறுப்பினர் பதவி வகிக்கும். வேலுமணி முன்னதாக சிறப்பு திட்டங்கள் செயல்பாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் தொழில்துறை அமைச்சர் ஆனார். சென்ற வாரம் அவர் வருவாய்துறைக்கு மாற்றப்பட்டார்.
கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேலுமணி ஆகிய இரு அமைச்சர்கள் பதவி நீக்கம்செய்யப்படுவதற்கான முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையை ஆளுனர் ரோசையா ஏற்றுக்கொண்டதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


