சென்னை: மின் உற்பத்தியை பெருக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப் படும் என தமிழக ஆளுநரின் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்து தமிழக ஆளுநர் ரோசய்யா இன்று (ஜன.30) சட்டப்பேரவையில் கூறியதாவது:
அரசின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும், தமிழகத்தின் மின் நிலைமை தொடர்ந்து கவலையளிப்பதாக உள்ளது. முந்தைய திமுக அரசு புதிய உற்பத்தியினை ஏற்படுத்தத் தவறியதாலும், மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சார ஒதுக்கீடு செய்வது பற்றிய நமது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காத காரணத்தாலும் தமிழக மக்கள் மின் பற்றாக்குறையினால் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
கடன் சுமையால் மூழ்கும் நிலையிலுள்ள மின்வாரியத்திற்குப் புத்துயிரூட்ட 2600 கோடி ரூபாயை பங்கு மூலதனமாகவும், 955 கோடி ரூபாயை கடனாகவும் இவ்வரசு வழங்கியுள்ளது.
மின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், பற்றாக்குறையைக் குறைக்கவும் இவ்வரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்றதிலிருந்து, காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய நிறுவப்பட்ட 556 மெகாவாட் தவிர, மாநிலத் தொகுப்பில் 30 மெகாவாட்டும் மத்திய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் பங்காக 113 மெகாவாட்டும் கூடுதல் மின் உற்பத்தித் திறனாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டாண்டுகளில் 4,704 மெகாவாட் அளவிற்குக் கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படத் தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





