சென்னை: சாலை அமைப்பதற்காக குடிசைகளை அகற்றி அங்கு வசிக்கும் மக்களை துரத்திக் கொண்டிருப்பதை எதிர்த்து நாளை (19/08/2010) சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக சார்பாக ஆர்பாட்டம் நடைப்பெறும் என அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து அவர் அளித்துள்ள அறிக்கையில் சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்காக முன் அறிவிப்பு ஏதுமின்றி அங்கு இருக்கும் குடிசைகளை தரைமட்டமாக்கி அங்குள்ள மக்களை மிக மோசமான இடத்திற்கு விரட்டி வருகிறது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.
சென்னையில் உள்ள 2000 குடிசைப் பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், மேற்படி குடிசைப் பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான குடிசைவாழ் மக்கள் அகற்றப்பட்டு, கேவலமான பகுதிகளில் அரசால் குடியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் கூவத்தை சீரமைக்கப் போவதாகக் கூறிக்கொண்டு அதன் கரையில் வாழும் மக்களையும் விரட்டியடிக்கிறார் கருணாநிதி.
முதலிலேயே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் கையில் சிக்கி மீன்பிடித் தொழிலையே விட்டு ஓடும் அவல நிலையில் உள்ளனர். அதுப் போதாதென்று எண்ணூர் முதல் கொட்டிவாக்கம் வரை உள்ள லட்சக்கணக்கான மீனவ மக்களை கடலோர மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் என்ற பெயரில் அகற்றுவதற்கான முயற்சியில் தற்போது அரசு ஈடுபட்டு வருகிறது.
எனவே, ஏழை, எளிய, குடிசைப் பகுதி மக்கள் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடிக் கொண்டிருக்கின்ற அரசைக் கண்டித்து, தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில், நாளை (19.8.2010) காலை 10 மணி அளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



