சென்னை: மாநிலத்தில் சுயாட்சி , மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் ஜெயலலிதாவுக்கு புரியாது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மாநில உரிமைகளை முதல்வர் கருணாநிதி சுயநலத்திற்காக விட்டுக் கொடுத்து வருவதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கத்தைத் தந்து மாநில அரசின் உரிமைகளுக்காக 1970-ம் ஆண்டுகளிலேயே மத்திய அரசுடன் வாதாடி உரிமைகளைப் பெறத் தொடங்கியது திமுக. மத்தியில் தனியொரு கட்சியின் ஆட்சி நிலவும் சூழல் மாறி பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாகும் கூட்டாட்சி அமையத் தொடங்கியது.
இதன்பிறகே, தமிழகம் அதிகளவில் திட்டங்களைப் பெற்று பயனடைந்து வருகிறது.
1991-ல் சந்தர்ப்பவசத்தால் காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் தலைமையில் மத்தியில் அமைந்த அரசை மிரட்டி இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியைக் கலைக்கச் செய்தவர் ஜெயலலிதா. 1998-ல் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்ற நிலையில், திமுக அரசைக் கலைக்க ஒப்புதல் தந்தால்தான் அதிமுக ஆதரவு தரும் எனக் கூறினார் ஜெயலலிதா.இந்த நிபந்தனையைப் பெறுவதற்காகவே ஒப்புதல் தருவதில் காலம் கடத்தி, அந்த முதுபெரும் அரசியல் தலைவர் வாஜ்பாய் நிலைகுலைந்து 13 நாளில் பதவியை ராஜினாமா செய்யக்கூடிய நிலைக்கு ஆளாக்கியவர்தான் ஜெயலலிதா. அவருக்கு மாநிலத்தில் சுயாட்ச, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் எப்படி புரியும்?
மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்பதை, சந்தர்ப்பம் ஏற்படும் நேரங்களில் திமுக சுட்டிக்காட்டி வந்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு என்று மத்திய அரசு கூறியதும் அது குறித்து மாநில அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இதனால், அந்த முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்ததால்தான் மத்திய அரசு முடிவை நிறுத்தி வைத்ததாக ஜெயலலிதா கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




