புதுதில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று (ஜூலை 19) நடந்த பயங்கர ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக கூறப் படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் சைந்தியா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது, உத்தர பங்கா ரயில் நேற்று (ஜூலை 19) அதிகாலை பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 75 ரயில் பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதனால், மம்தா பானர்ஜி பதவி விலக கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2011ம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மே.வங்க மாநில அரசியலில் ஈடுபட மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தன்னை கட்டம் கட்ட, இந்த விபத்தை, இடதுசாரிகள் ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக் கொள்ளும் என்ற எண்ணம் மம்தாவுக்கு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னால், ஐமுகூ அரசுக்கு களங்கம் ஏற்பட மம்தா பானர்ஜி விரும்பவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அவசர முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் என மம்தா பானர்ஜிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியுள்ளதாக தெரிகிறது.
மம்தா பானர்ஜி பதவி விலகுவதை மத்திய அரசும் விரும்பவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




