சென்னை: கிராம, நகர்புற கட்டமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவக் கூடிய பி,எஸ்,எல்,வி- சி-15 (Polar Satellite Launch Vehicle) வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல்தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி - சி 15 ராக்கெட், இன்று ( 12/07/2010) காலை 9. 22 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி மையத்தின் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக் கொண்டு இந்த வெற்றியைக் கொண்டாடியது.
ஏப்ரல் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்திய தயாரிப்பான கிரையோஜெனிக் எரிப்பொருள் கொண்ட ஜி,எஸ்,எல்,வி- டி 3 ( Geosynchronous Satellite Launch Vehicle ) ராக்கெட் வங்கக் கடலில் விழுந்தது. இதனால் சற்று மனம் தளர்ந்திருந்த விஞ்ஞானிகளுக்கு இந்த வெற்றி பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
கார்ட்டோசாட் - 2 பி செயற்கைக்கோள் , அல்சாட் - 2ஏ, ( அல்ஜீரியா தயாரிப்பு) மற்றும் கனடா சுவிஸ் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஐசாட் - 1, டிசாட் - 1, ஸ்டட்சாட்( இந்தியாவில் ஆந்திரா மற்றும் கர்நாடாகவில் உள்ள 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து தயாரித்தது ) , மற்றும் ஓஷன்சாட் 2 எனும் மிகச் சிறிய செயற்கைக்கோளையும் சேர்த்து 4 துணை செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
இதன் "கவுன்ட்டவுண்' கிட்டதட்ட 52 மணி நேரத்துக்கு முன் துவங்கியது. இந்த ராக்கெட், 44.4 மீட்டர் நீளமும், 230 டன் எடையும் கொண்டது. பூமியிலிருந்து 630 கி.மீ., தொலைவில், கார்ட்டோசாட் - 2பி செயற்கைக்கோளை, அதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்ட்டோசாட் - 2பி செயற்கைக் கோள் 694 கிலோ எடை கொண்டது. இதில் 0.8 மீட்டர் அளவிற்கு பகுப்பு திறன் கொண்ட கேமரா பொருத்த பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள்கள் மூலம் 9.6 கிமீ நிலப்பரப்பை படம் பிடிக்க முடியும். இதன் மூலம் கட்டமைப்புகள் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மேம்படுத்தமுடியும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|


