கோவை: கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை 5 நாட்களுக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைப்பெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியுலகுக்கு வழங்க சென்னை, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஊடக பிரதிநிதிகள் வருகைத் தரவுள்ளனர். ஊடக பிரதிநிதிகள், மாநாட்டு நிகழ்வுகளை தங்கள் ஊடக அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்ப கொடிசியா அரங்கிற்கும், மாநாட்டு பொது அரங்கிற்கும் இடையே 12,000 சதுர அடி பரப்பளவில் ரூ. 60 லட்ச ரூபாய் செலவில் பல தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட பிரம்மாண்ட ஊடக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 21) திறந்து வைத்தார்.
வசதிகள்:
நவீன ஹெச்.டி.பி. இணையதள வழங்கி:
வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஊடக பிரதிநிதிகள் தங்கள் அலுவலகங்களுக்கு உடனே அனுப்ப ஹெச்.டி.பி இணையதள வழங்கி அமைக்கப் பட்டுள்ளது. இந்த இணையதள வழங்கியுடன் 15 கணிணிகள் இணைக்கப் பட்டுள்ளன.
செய்தியாளர் அறை:
இணையதள வசதியுடன் கூடிய 50 கணிணிகளைக் கொண்ட செய்தியாளர்கள் அறை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு 50 செய்தியாளர்களும் ஒரே நேரத்தில் அமர்ந்து பணி செய்யலாம். இது தவிர, 50 மடி கணிணிகள் இங்கு உள்ளன. மடிக் கணிணிகள் தேவைப் படும் பத்திரிகையாளர்கள், தங்கள் பற்றிய விவரங்களை ஊடக அரங்கில் இருக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் அளித்து விட்டு பயன் படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இதே போல, புகைப்படக் கலைஞர்களுக்கும் 55 கணிணிகளுடன் கூடிய பிரத்தியேக அறை அமைக்கப் பட்டுள்ளது. இங்கு புகைப்படங்களை உடனுக்குடன் தொகுத்து மின்னஞ்சல் செய்யும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
தொலைக்காட்சி படத்தொகுப்பு அறை:
20 கணிணியுடன் கூடிய தொலைக்காட்சி படத்தொகுப்பு அறை அமைக்கப் பட்டுள்ளது. இங்கிருக்கும் கணிணிகள் எப். டி.வி. வசதியுடன் கூடிய இணையதள வழங்கியுடன் இணைக்கப் பட்டுள்ளன. இதனால், மாநாடு நிகழ்ச்சியின் தொலைக்காட்சி படத்தை, தங்கள் அலுவலகங்களுக்கு உடனுக்குடன் அதிவேகமாக தொலைக்காட்சி பிரதிநிதிகளால் அனுப்ப முடியும்.
தொலைபேசி அறை:
பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகங்களை தொடர்பு கொள்ள 20 தொலைபேசி இணைப்புகளை கொண்ட தொலைபேசி அறை உருவாக்கப் பட்டுள்ளது. இது தவிர, பி.எஸ்.என்.எல். நிறுவனம் பிரத்தியேக கட்டுப்பாடு அறை ஒன்றை இந்த அரங்கில் அமைத்துள்ளது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையில், அதி வேக இணையதள வசதியுடன் 180 கணிணிகள் அமைக்கப் பட்டுள்ளன.
நேரடி ஒளிப்பரப்பு தொலைக்காட்சி வாகனங்கள் நிறுத்துமிடம்:
உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களை கொடிசியா 'D' அரங்கின் சுற்றுச்சுவர் அருகிலும், ஜெகந்நாதர் கோவில் பின்புறம் இருக்கும் காலி இடத்திலும் நிறுத்தலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




