மங்களூர்: வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நச்ரின் எழுதியதாக சொல்லி, முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்ட 2 கன்னட நாளிதழ்களின் அலுவலகங்கள் சமூக விரோதிகளால் தாக்கப் பட்டுள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு சொந்தமான கன்னட நாளிதழான ‘கன்னட பிரபா'விலும், ‘ஜெய் கிரணா' என்ற மாலை நாளிதழிலும், முஸ்லிம் பெண்கள் அணியும் புனிதமான பர்தா குறித்து ஆட்சேபிக்க தகுந்த கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இது வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லீமா நச்ரின் எழுதிய ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு என பத்திரிகை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சர்ச்சைக்குரிய கட்டுரை, முஸ்லிம்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ஷிமோகாவில் நடந்த வன்முறையில் 2 பேர் கொல்லப் பட்டனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்ட 2 பத்திரிகை அலுவலகங்கள் சமூக விரோதிகள் சிலரால் தாக்கப் பட்டுள்ளன.
இன்று மாலை (மார்ச் 2) பத்திரிகை அலுவலகங்களுக்கு வந்த வன்முறை கும்பல், அலுவலகத்தில் இருக்கும் பொருட்களை அடித்து நொறுக்கியது.
தாக்குதல் சம்பவத்தில் 7 கணிப்பொறிகள் சேதம் அடைந்தன. இது போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்த வன்முறை கும்பல், பத்திரிகை ஊழியர்களை மிரட்டியதாக தெரிகிறது.
தகவல் அறிந்து போலீஸ் வருவதற்குள் வன்முறை கும்பல் தப்பி விட்டது.
Want to write for Maniyosai?
Download our android app





