புதுதில்லி: தில்லியிலிருந்து மும்பை செல்லும் இண்டிகோ விமானத்தை இன்று (பிப்-25) ஒரு பெண் விமானி ஓட்டியதால் விமானம் புறப்படுவதில் தாமதம் நேர்ந்தது.
ஆணுக்கு பெண் சரி நிகர் சமம் என்னும் கோட்பாடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தையல் தொழில் பார்ப்பதிலிருந்து தொடங்கி விண்வெளி பயணம் வரை எல்லா துறைகளிலும் பெண்கள் வலது காலை எடுத்து வைத்து விட்டனர். இந்த ஒரு காலகட்டத்தில் கூட ஒரு விமான சேவை ஒரு பெண் பைலட்டால் தாமதமானது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
ஆனால் இத்தகைய தாமதம் ஏற்பட அந்த பெண் விமானி ஒரு குற்றமும் செய்யவில்லை.
இன்று காலை 8-10 மணிக்கு புதுதில்லியிலிருந்து மும்பை செல்ல வேண்டிய தனியார் சேவையான 6E 179 விமானம் முதலில் பனி மூட்டம் காரணமாக சற்று தாமதமானது. வானிலை சற்று தெளிவாகி விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் முளைத்தது ஒரு புதிய சவால். விமானம் புறப்படுகையில் வழக்கமாக செய்யப்படும் அறிவிப்பை கேட்ட ஒரு பயணி, விமானம் ஓட்டும் பைலட் ஒரு பெண் என்பதை அறிந்ததும் விமானத்தில் பயணம் செய்ய மறுத்து விட்டார்.
என்ன நடந்தது என்பதை விவரித்த ஒரு பயணி கூறியதாவது:
விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு செய்யப்பட்டவுடன் ஒரு நடுத்தர வயதுள்ள பயணி தகராறு செய்யத்தொடங்கினார். முதலில் முணுமுணுத்த அவர் பிறகு உயர்ந்த குரலில், " நான் சாகத் தயாராக இல்லை. இந்த பெண் விமானியால் அவர் வீட்டையே கவனித்துக் கொள்ள முடியாது. அப்படி இருக்கையில் விமானத்தை எப்படி சரிவர கவனித்து ஓட்டப் போகிறார்" என்று கத்தத் தொடங்கினார். உடனே விமான பணிப் பெண்ணை அழைத்து ஒரு பெண் விமானி விமானத்தை ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தினார். அவரை சமாதானப் படுத்த முடியாமல் போகவே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு செய்தி அனுப்பபட்டது. அவர் விமானத்திலிருந்து அவருடைய பதிவு செய்யப்பட்ட உடைமைகளுடன் இறக்கி விடப்படுவதாக உறுதி கூறியவுடன்தான் சற்று அமைதியானார். சொன்ன படியே அவரை விமானத்திலிருந்து இறக்கி பிறகு விமானம் புறப்படுகையில் கிட்டத் தட்ட 1 1/2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுவிட்டது.
அந்த பயணி உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app

