லண்டன்: எகிப்து புரட்சியில் பெரும் பங்கு வகித்த ஃபேஸ்புக் இணையதளத்தை பாராட்டும் வகையில் புதிதாக பிறந்திருக்கும் தன் பெண் குழந்தைக்கு எகிப்தியர் ஒருவர் ஃபேஸ்புக் என பெயர் சூட்டியுள்ளார்.
எகிப்தில், சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் தலைமையில் நடந்து வந்த 32 கால கொடுங்கோல் ஆட்சி, மக்கள் புரட்சியின் காரணமாக அண்மையில் முடிவுக்கு வந்தது. இந்த மக்கள் புரட்சிக்கு காரணம் ஃபேஸ்புக்தான் என எகிப்தியர்கள் கருதுகின்றனர்.
காரணம், எகிப்தின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஃபேஸ்புக் இணையதளத்தில் 32,000 குழுக்களும், 14,000 பக்கங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. ஆட்சிக்கு எதிரானவர்களை இணைக்கும் பாலமாக ஃபேஸ்புக் (தன்னை அறியாமல்!) செயல்பட்டுள்ளது. இளைஞர்களிடம் அரசின் கொள்கைகளை விளக்க ஃபேஸ்புக் இணையதளத்தையே அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்களும் பயன் படுத்தினர்.
பிப்ரவரி 11ம் தேதி சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் பதவி விலகிய பின் 'ஃபேஸ்புக்குக்கு நன்றி' என்ற வாசகத்துடன் கூடிய விளம்பர பதாகைகள் கெய்ரோ முழுவதும் வைக்கப் பட்டன.
இந்நிலையில், ஜமால் இப்ராகிம் என்ற எகிப்திய இளைஞர் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று விட்டார். அவர் புதிதாக பிறந்திருக்கும் தன் பெண் குழந்தைக்கு 'ஃபேஸ்புக்' என பெயரிட்டுள்ளார்.
இது குறித்து தனது வலைப்பூவில் கருத்து தெரிவித்துள்ள இணையதள வலைப் பதிவாளர் ஒருவர், "மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டியமைக்காக ஒட்டு மொத்த இணையதளத்திற்கும் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு இணையதளங்களின் பெயர் வைப்பதெல்லாம் ஏற்புடையதல்ல. எதிர்காலத்தில் ஃபேஸ்புக், யாஹூ, ஏஓஎல் ஆகியோர் ஓர் வகுப்பில் படிப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை." என எழுதியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app


