ஐதரபாத்: காங்கிரஸ் கட்சியின் மேலிட உத்தரவை உதாசீனப் படுத்தி விட்டு, ஜெகன் மோகன் ரெட்டி செய்து வரும் யாத்திரை பற்றி காங்கிரஸ் மேலிடம் பார்த்துக் கொள்ளும் என ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பலர் துக்கம் தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அப்போது தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்கப் போவதாக கடப்பா தொகுதி காங். நாடாளுமன்ற உறுப்பினரும், ஒய்.எஸ்.ஆர் மகனுமான ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்தார்.
ஆனால், அவரது யாத்திரைக்கு காங்கிரஸ் மேலிடம் அனுமதியளிக்கவில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கட்டளையை மீறி தனது யாத்திரையை ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஜூலை 7) தொடங்கினார். இது ஆந்திர காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் யாத்திரை பற்றி ஆந்திர முதல்வர் ரோசய்யா இன்று (ஜூலை 8) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
”மாநில முதல்வராக இதைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. இந்த விவகாரத்தை கட்சி மேலிடம் பார்த்துக் கொள்ளும். இதை பற்றி கட்சி மேலிடத்திற்கு எந்த அறிக்கையையும் அனுப்பப் போவதில்லை. ஆனால், யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ளும்.” இவ்வாறு ரோசய்யா கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app


