பாலக்காடு: தனது தாய் வழி பாட்டி முன்னிலையில் சுனந்தா புஷ்கரை நாளை (ஆக.22) திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர்.
மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர் பதவியை வகித்து வந்தவர் சசி தரூர். இவர் அடிக்கடி ட்விட்டர் இணையதளத்தில் அடிக்கடி எதையாவது எழுதி மத்திய அரசை நெளிய வைத்து வந்தார். ட்விட்டர் இணையதளத்தை இந்தியாவில் பிரபலப் படுத்தியவரே சசி தரூர்தான் என்றால் மிகையாகாது.
ஐபிஎல் கொச்சி அணியை சட்ட விரோதமாக தன் காதலி சுனந்தாவுக்கு வாங்கிக் கொடுத்து விட்டார் என்ற சர்ச்சை காரணமாக அமைச்சர் பதவியை சசி தரூர் இழக்க நேரிட்டது.
இந்நிலையில், சுனந்தா புஷ்கருக்கும் சசி தரூருக்கும் ஓணம் பண்டிகையின் முதல் நாளான நாளை (ஆக.22) திருமணம் நடக்கவுள்ளது. தரூரின் தாய் வழி பாட்டி முன்னிலையில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிகிறது.
நாளை காலை 7.30 மணிக்கு பாலக்காடில் உள்ள தரூரின் 200 ஆண்டுகள் பழமையான வீட்டில், நாயர் வழக்கப் படி திருமணம் நடக்கவுள்ளதாக தரூருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருமணம் முடிந்ததும் துபாயில் நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தம்பதிகள் செல்லவுள்ளனர். துபாயில் இருந்து ஸ்பெயின் நாட்டுக்கு தேனிலவு செல்லப் போகிறார்களாம் தரூர்-சுனந்தா தம்பதி.
சசி தரூருக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app





