சென்னை: சிஃபி நிறுவனத்தின் முகவர்கள் அதிக பணம் சம்பாதிக்க அந்நிறுவனம் ஒரு புது திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘சிஃபி மை லைஃப்’ என பெயரிடப் பட்டுள்ளது.
இன்று இணையதள மையங்கள் (Internet browsing centres) நடத்துவதற்கு அதிக முதலீடு தேவை படுகிறது. கட்டிட வாடகை, மின்சார செலவு, தொழில்நுட்ப பராமரிப்பு, ஊழியர்களின் ஊதியம் என செலவு அதிகமாக இருந்தாலும், அதற்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. இதனால் சிஃபி டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் முகவர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இணையதள மையங்களை பல இடங்களில் மூடி வருகின்றனர்.
இந்நிலையில், சிஃபி நிறுவன முகவர்கள் நடத்தும் இணையதள மையங்களுக்கு அதிக லாபம் கிடைக்க, சிஃபி நிறுவனம் ‘சிஃபி மை லைஃப்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது குறித்து சிஃபி நிறுவனத்தின் தலைவர் ராஜூ வெகஸ்னா கூறியதாவது:
“சிஃபி மை லைஃப் திட்டத்தின் மூலம், இணையதள மையங்களை நடத்துவோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறைய பணத்தை சம்பாதிக்கலாம். இணையதளம் மூலம் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்வது, மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் கட்டுவது, தொழில் நிறுவனங்களுக்கான இணைய வழி பணியாளர் தேர்வுகளை தங்கள் மையத்தில் நடத்த அனுமதிப்பது போன்ற சேவைகளை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிஃபி இணையதள மைய முகவர்கள் வழங்கலாம். அது மட்டுமில்லாமல், தங்கள் மைய கட்டிடத்தின் உள்புற சுவர்களில் விளம்பரங்களை வைக்க அனுமதிக்கலாம்.
இந்தியாவில் மொத்தம் 1,60,000 இணையதள மையங்கள் உள்ளன. நாட்டின் 37% இணையதள பயன்பாடு இந்த மையங்களில்தான் நடக்கின்றன. இந்த சிஃபி மை லைஃப் திட்டத்தின் மூலம் இணையதள மையங்கள் நடத்துவோர் சிஃபி நிறுவனம் வழங்கும் அகண்டவரிசை இணையதள சேவையை பயன் படுத்திக் கொள்ளலாம். அல்லது, 9999 ரூபாயில் நாங்கள் வழங்கும் மோடம் போன்ற கருவியை பயன் படுத்தி இணையதள சேவையை வழங்கலாம். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் இந்தக் கருவிக்கு ஓராண்டு உத்திரவாதக் காலம் உண்டு. இந்தக் கருவியை அவ்வப்போது பராமரிக்கும் பொறுப்பையும் சிஃபி நிறுவனமே பார்த்துக் கொள்ளும்.”
இவ்வாறு சிஃபி நிறுவன தலைவர் ராஜூ வெகஸ்னா தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app




