ஸ்ரீஹரிகோட்டா: நான்கு செயற்கோள்கள் அடங்கிய பி.எஸ்.எல்.வி. -சி.18 ராக்கெட்டை இன்று (அக்.12) காலை 11 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ.
பருவநிலை மாற்றங்களை ஆராயும் 'மெகா ட்ராபிக்யூ' {Mega tropiques) உள்ளிட்ட 4 செயற்கைக்கோள்களை உள்ளடக்கியது இந்த பி.எஸ்.எல்.வி. - சி.18 ராக்கெட். (Polar Satellite Launch Vehicle) நான்கு செயற்கை கோள்களும் அதனதன் சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன என்று இஸ்ரோ (Indian Space Research Organisation) அறிவித்துள்ளது.
ரூ.160 கோடி ரூபாய் செலவில் பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள 'மெகா ட்ராபிக்யூ' என்ற நவீன செயற்கைக்கோளுடன், சென்னை மற்றும் கான்பூரை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்துள்ள கல்வித் துறைக்கான 3 சிறிய ரக செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. அவை, லக்ஸம்பர்க் (Luxembourg) மாணவர்களின் வெஸ்ஸல்சட் -1 (VesselSat -1), எஸ்.ஆர்.எம். பல்கலை கழக மாணவர்களின், SRMSat, கான்பூர் ஐஐடி மாணவர்களின் ஜுக்னு (Jugnu) சாட்டலைட்டுகள் ஆகும்.
இந்தச் செயற்கைக்கோள்கள், பூமியிலிருந்து 867 கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியில் சுற்றி வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்
இவற்றில் 'மெகா ட்ராபிக்யூ' செயற்கைக்கோள், உலக அளவில் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்.
குறிப்பாக, இந்தியாவில் ஏற்படும் புயல், வெள்ளம் மற்றும் வறட்சி தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் அந்த செயற்கைக்கோளை ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பான அதிநவீன ஆய்வுக்கான செயற்கைக்கோள் திட்டத்தை மேற்கொண்டுள்ள 2-வது நாடு என்ற தனிப்பெருமையை, இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-18 ராக்கெட் இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app


