தேனி: நடிகர் விஜயகாந்தால் சினிமாவில் மட்டுமே முதல்வராக முடியும் என்று மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் திமுகவை சேர்ந்த மத்திய இணை மந்திரியும், நடிகருமான நெப்போலியன் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:
திரைப்பட நடிகர்களை பார்க்க பொதுவாகவே கூட்டம் கூடுவார்கள். அதுவும் திருமண விழாக்களில் நடிகர்களை பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். திருமண விழாக்களில் கூடுகின்ற கூட்டங்களை பார்த்து விட்டு விஜயகாந்த் நான்தான் அடுத்த முதல்வர் என்று பேசுகிறார்.
2005-ல் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் தேமுதிக. கடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றனர். இவரது அடுத்த ஆசை என்பது 2 தொகுதியோ, அடுத்தது 4 தொகுதியோ ஜெயிக்கலாம் என்று இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்வது நகைப்பிற்குரிய விஷயமாகும்.
சினிமாவில் வேண்டுமென்றால் முதல்வர் ஆகலாம். ஆனால் தமிழ்நாட்டு முதல்வராக விஜயகாந்தால் முடியாது. விஜயகாந்த் அவரது சொந்த கல்லூரியில் கூட முதல்வராக முடியாது. ஏனென்றால் அதற்கு கூட கல்வி தகுதி வேண்டும். அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக ஆவதற்கு ஆசைப்படலாமா?
தலைவர் கலைஞர் 12 சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இப்போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார். எனவே, கலைஞர் 6வது முறையாக முதல்வர் ஆக வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு அளியுங்கள்.
இவ்வாறு நெப்போலியன் பேசினார்.
Want to write for Maniyosai?
Download our android app





