சென்னை: தன்னிடம் கறுப்புப் பணம் இருப்பதாக உளுத்துப் போன குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாக தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக ஆகிய இரு ஊழல் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என விஜயகாந்த் அண்மையில் கூறியிருந்தார். திமுக, அதிமுகவை குறை கூறும் விஜயகாந்த்தே கறுப்பு பணம் வைத்திருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
முதல்வரின் அறிக்கைக்கு விஜயகாந்த் விடுத்துள்ள பதில் அறிக்கை:
கதாநாயனாக நடித்து நான் வாங்குகிற சம்பளத்தில் பெரும்பகுதியை வருமான வரி கட்டாமல் கறுப்புப் பணமாக வாங்குவதாக முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இவர் இப்படி கூறுவது முதல் முறையல்ல. வேறு எந்தக் குற்றம், குறையும் காண முடியாததால் உளுத்துப்போன குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே ஏற்பட வேண்டும். வருமானத்தை ஈட்டுவது முக்கியமல்ல. அதனை எவ்வாறு செலவு செய்கிறோம் என்பதே முக்கியம். நான் செய்துள்ள உதவிகளை பட்டியலிட்டால் எந்தப் பத்திரிகையிலும் வெளியிட இடம் இருக்காது.
என் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுமாறு முதல்வர் கூறியுள்ளார். என் முகத்தை நான் பார்ப்பது முக்கியமல்ல. நாட்டு மக்கள் பார்க்கிறார்களா என்பதே முக்கியம்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





