You are here: Home ஆன்மீகம் ஆலய பிரவேசம் ஆலயபிரவேசம் - கொடுமுடி

ஆலயபிரவேசம் - கொடுமுடி

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 

ஆன்மீக எண்ணங்களுக்கும், பக்தி பரவசத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் தரும் இடம் நம் தமிழ்நாடு. இங்கே பல சிவன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், முருகன் கோயில்கள், அம்மன் கோயில்கள் என பலவாரியானக் கோயில்கள் இருக்கிறது. பல புராணக் கதைகளும் இருக்கிறது. எல்லா புராணக் கதைகளிலும் மையமாக விளங்குபவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மும்மூர்த்திகள். இந்த மும்மூர்த்திகளையும் ஒன்றாக ஒரே இடத்தில் தரிசிக்க முடியுமா என்றால் அதற்கு நீங்கள் கொடுமுடிக்கு தான் போக வேண்டும்.பெற்ற சாபத்தின் விளைவாக பிரம்மாவிற்கு எங்குமேத் தனிக் கோயில்கள் கிடையாது. ஆனால் இந்த திருத்தலத்தில் சிவன், விஷ்ணுவுடன் சேர்ந்து பிரம்மாவிற்கும் தனி சன்னதி உண்டு. கொடுமுடி ஈரோடு மாவட்டத்திலிருந்து 40 கிமி தொலைவில் காவிரிக் கரையில் இருக்கிறது. இங்கு அருள்மிகு மகுடேஸ்வரர், வடிவுடைநாயகித் தாயாரின் திருமணக் காட்சியை மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் தரிசித்திருக்கும் வண்ணம் மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

நம் நாட்டில் இறைவன் உறையும் ஆலயங்கள் பல இருந்தாலும் அவற்றில் தேவாரப் பதிகம் பாடல் பெற்றத் தலங்கள், ஆழ்வார் பாசுரங்கள், நாலாயிர திவ்வியபிரபந்தம் என பாடல் பெற்றத் தலங்கள் நிறையவே இருக்கின்றன. இவைகளில் தேவாரப் பதிகம் பாடல் பெற்ற 274 தலங்களில் 7 தலங்கள் கொங்கு நாட்டில் உள்ளது. அவற்றுள் திருப்பாண்டி கொடுமுடி என்னும் தலம் 6வது தலமாக விளங்குகிறது. மற்ற 6 தலங்கள் கருவூரா நிலை (கரூர்), வெஞ்ச மாங்கூடல், திருநணா (பவானி), அவிநாசி, திருமுருகன்பூண்டி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு) ஆகியவை.

தல வரலாறு:

முன்பு ஒரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தம்மில் வலியவர் யார் என்று வாக்குவாதம் நடந்தது. முடிவில் ஆதிசேஷன் மேருமலையின் சிகரத்தை மிக வலிமையாக சுற்றி வளைத்துக் கொண்டார். அதை வாயு பகவான் முழு வலிமையுடன் தகர்த்ததில் அந்த மேருமலை ஐந்து துண்டுகளாகப் பிளந்து ஐந்து மணிகளும் ஐந்து இடங்களில் விழுந்து ஐந்து தலங்களாக மாறின. அவற்றில் சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணாமலையாகவும், மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய் மலையாகவும், மாணிக்கம் விழுந்த இடம் இரத்தினகிரி (சிவாய மலை) யாகவும், நீலமணி விழுந்த இடம் திருப்பொதிகை மலையாகவும் அமைந்தன. ஐந்தாவதாக வைரம் விழுந்த இடம் கொடுமுடியாக அமைந்தது. கொடுமுடி என்றால் பெரிய சிகரம் என்று பொருள். இங்கு மலைச் சிகரமே மகுட லிங்கராக அமைந்துள்ளது. மற்ற சிகரங்கள் எல்லாம் மலைகளாகக் காட்சித் தரும்போது கொடுமுடி லிங்க வடிவமாக அமைந்துள்ளது. எனவே கொடுமுடியும் ஒரு மலைச் சிகரமாகும்.

காவிரித் தோன்றிய வரலாறு:

இமயமலையில் சிவனுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைப்பெற்றப் போது அதைக் கண்டு களிக்க மானிடர், தேவர் என பலரும் வந்திருந்தனர். அப்பொழுது அந்த வேற்றுமைகளை சரிகட்ட அகத்தியரை தென்திசையில் இருக்கும் பொதிகை மலைக்கு அனுப்பினார். அகத்தியர் தென்திசை வரும்போது விந்திய மலையின் கர்வத்தை அடக்கி வில்லவன், வாதாபி எனும் அசுரர்களின் வலிமையை அழித்து கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையில் தங்கி தவம் செய்தார். அப்பொழுது அவரது கமண்டலம் கங்கை நீரால் நிரம்பியிருந்தது.

தேவலோகத்தின் தலைவனான இந்திரன் தன் நாட்டின் நன்மைக் கருதி சீர்காழியில் ஒரு நந்தவனம் அமைத்திருந்தான். ஆனால் மழை இல்லாமல் போனதால் அவன் சிவபெருமானிடம் முறையிட்டான். அதற்கு சிவபெருமான் விநாயகரை அழைத்து காக்கை உருவங்கொண்டு அகத்தியரின் கமண்டலத்தைத் தட்டி விடும்படி கட்டளையிட்டார். அதை ஏற்ற விநாயகரும் வெள்ளைக் காகமாக உருமாறி கமண்டலத்தைக் கவிழ்த்தார். கமண்டலத்தில் நிறைந்திருந்த கங்கை நீர் காவிரியாக ஓடத் தொடங்கியது. இவ்வாறு கவிழ்க்கப்பட்ட இடமே கொடுமுடித்துறை. இங்கு காவிரி தெற்கு நோக்கி வந்து அங்கிருந்து கிழக்கு நோக்கி செல்கிறது. இங்கேக் காவிரியின் நடுவே உள்ள அகத்தியர் பாறையில் இந்த வரலாறுப் பற்றியக் குறிப்புகள் உள்ளது. அது மட்டுமின்றி திருச்சி மாவட்டம் கல்லணையிலும் விநாயகர் காக்கை வடிவங்கொண்டு அகத்தியரின் கமண்டல நீரை கவிழ்த்தது அழகிய சிற்பமாக உள்ளது. இக்காரணத்தால் இத்தலத்தில் உள்ள விநாயகர் காவிரிக் கண்ட விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார். அகத்தியரின் கமண்டல நீரால் உருவான காவிரி சென்ற இடமெல்லாம் செழிப்பை சேர்க்க ஆரம்பித்ததும் சிவபெருமான் அகத்தியர் விரும்பியப்படியே சிவபெருமான் வடிவாம்பிகைத் திருமணக் காட்சியை கொடுமுடியில் நிகழ்த்திக் காட்டினார். அத்திருமணத்தை நேரில் கண்டு மகிழ மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் வந்திருந்தனர்.

தலப் பெருமைகள்:

இத்தலத்திற்கு பலப் பெருமைகள் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 தலங்களுள் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூன்றுப் பேர் பாடிய தேவாரமும் அமையப் பெற்றது. கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழில் ஒன்று. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று பேரையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தாயாருக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. பிரம்ம தேவரின் அடையாளமாக வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரம் 3000 ஆண்டுகள் பழமையானது. இதில் பூ, பழம் எதுவுமேக் காய்ப்பதில்லை என்பது ஒரு அதிசயம். இந்த மரத்தினடியில்தான் பிரம்மதேவர் எழுந்தருளியிருக்கிறார்.

ஆவணி, பங்குனி மாதங்களில் நான்கு நாட்கள் சூரியனின் கதிர்கள் அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வடிவுடைநாயகித் தாயாரின் திருவுருவங்கள் மீது விழுகிறது. இது சூரிய பூஜை என்றுக் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்தலத்தில் உமாதேவி, பிரம்மன், திருமால், தேவர்கள், அகத்தியர்,பரத்வாஜர், பாண்டியன், கன்மாடன், பாண்டு, கருடன் ஆகியோர் பூஜை செய்து அருள் பெற்றிருக்கின்றனர்.

கோயில் அமைப்பு:

கொடுமுடிக் கோயில் காவேரி ஆற்றின் மேற்குகரையில் கிழக்கு நோக்கியுள்ளது. முதலில் பிரதானமாக சுவாமி, அம்மன், பெருமாள் சன்னதிகளுக்குரிய மூன்று கோபுரங்கள் உள்ளன. தென்மேற்கு மூலையில் அனுமார் சன்னதி உள்ளது. அதன் முன்னே வன்னி மரமும் அதனடியில் பிரம்மன் சன்னதியும் உள்ளது.

சுவாமிக் கோயிலின் கோபுரத்தின் உட்புறமாக இருபக்கத்திலும் சூரியன், சந்திரன் இருபக்கத்திலும் உள்ளனர். பக்கத்தில் நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலில் நடுநாயகமாக மூலவர் வீற்றிருக்கிறார். உள்சுற்றுப் பிரகாரத்தில் தெற்கில் அறுபத்து மூவரும், தட்சிணாமூர்த்தியும்(குரு), மேற்கில் விநாயகர், உமா மகேசுவரர், அகத்தீசுவரர், கஜலட்சுமி, தம்பதி சமேதராக முருகனும், வடக்கில் நடராஜர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். பெருமாள் கோயிலின் உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வார்களும், பரமபதநாதர், வெங்கடாஜலபதி, கருடன் ஆகியோரும் எழுந்தருளியிருக்கின்றனர். நடுவில் வீரநாரயணப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். கோயிலின் எதிரே காவிரிக்கரையில் சக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். முதலில் இவரை தரிசித்துவிட்டுதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

பூஜைகள் மற்றும் திருவிழாக்கள்:

இக்கோயிலில் தினமும் காலை 7மணிக்கும், உச்சிவேளை 12 மணிக்கும், மாலை 6 மணிக்கும், இரவு 8 மணிக்கும் என நான்கு வேளைகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறுகின்றன. மேலும் பிரதோஷ காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பெரிய திருவிழா நடக்கும். இதில் தினந்தோறும் மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடக்கும். 10ம் நாள் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். காவிரியை சார்ந்தக் கோயில் என்பதால் ஆடிப்பெருக்கு இங்கு மிகவும் சிறப்பாக நடக்கும். மேலும் ஆடி மாதத்தில் அம்மனுக்கும், லட்சுமிக்கும் சந்தனக்காப்பு ஆராதனை நடக்கும். புரட்டாசி மாதத்தில் வடிவுடைநாயகி அம்மனுக்கும், தாயார் திருமங்கை நாச்சியாருக்கும் நவராத்திரி விழா சிறப்பாக நடைப்பெறும். கார்த்திகை தீபம் கொண்டாடப்படும். திருவாதிரை, ஏகாதசி நாட்களில் நடராஜர், பெருமாள் புறப்பாடு நடைப்பெறும். மாசி மாதம் சிவராத்திரி இரவில் நான்கு காலங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நடைப்பெறும்.

எங்கு இருக்கிறது எப்படி செல்வது?

ஈரோடு - கரூர் மெயின்ரோட்டில் கொடுமுடி இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 38 கிமீ தொலைவிலும் கரூரிலிருந்து 26 கிமீ தொலைவிலும் உள்ளது.இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, கன்னியாக்குமரி, திருச்செந்தூர், இராமேஸ்வரம், கோயம்புத்தூர், ஈரோடு, தாராபுரம், காங்கேயம், சேலம்,பழனி, ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உண்டு. திருச்சி, தஞ்சை போன்ற ஊர்களுக்கு ரயில் வசதியும் உண்டு.

கொடுமுடியில் தங்குவதற்கு வசதியான லாட்ஜ்கள் ஒன்றும் இல்லை. ஈரோடு அல்லது கரூரில் தங்கியிருந்து வந்து தரிசிக்கலாம்.






Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:D:angry::angry-red::evil::idea::love::x:no-comments::ooo::pirate:
:?::(:sleep::););)):0
Security
Please input the anti-spam code that you can read in the image.
Last Updated ( Saturday, 12 June 2010 14:35 )  


More and More


Banner

கிட்டதட்ட

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என விஜயகாந்த் சொல்வது...

Banner
Maniyosai Ads

மருத்துவம்

ஹெல்த் ப்ளஸ் - மெட்ராஸ் ஐ வராமல் தடுப்பது எப்படி?
’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி....மேலும்
0 Comments , 53 Hits
ஹெல்த் ப்ளஸ் - நமீதா டூ திரிஷா
நாம் தீவிரமாக செய்கிறோமோ இல்லையோ, எடைக் குறைத்தல் பற்றி...மேலும்
1 Comment , 321 Hits
ஹெல்த் ப்ளஸ் - கோடையை சமாளிக்க சில வழிகள்
கோடை காலம் வந்தாலே குழந்தைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். 2...மேலும்
4 Comments , 251 Hits

Feedback Form
Feedback Analytics