maniyosai.com

You are here: Home ஆன்மீகம் ஆலய பிரவேசம் ஆலயபிரவேசம் - ஆச்சாள்புரம்

ஆலயபிரவேசம் - ஆச்சாள்புரம்

E-mail Print PDF
Share/Save/Bookmark

Achalpuram’கூண்டோடு கைலாசம்’ என்று நாம் வேடிக்கையாக சொல்வதுண்டு. ஆனால் பலருக்கும் அதன் அர்த்தமும் தெரியாது; அதன் பின்னால் இருக்கும் சுவையானப் பின்னனியும் தெரியாது. நம் வீட்டுத் திருமண வைபவங்களில் தாலிக் கட்டியவுடன், ‘ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே,பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே... வந்தவர்க்கும் பார்த்தவர்க்கும் ஆனந்தம்...’ என்ற பாடல் பாடப் படுவதுண்டு. திருமணம் என்றால் மணமக்களுக்கு மட்டும் ஆனந்தம் இருந்தால் போதாது. அந்த திருமணத்தை காண வருபவர்களும் ஆனந்தம் அடைய வேண்டும். அதற்கு இன்று நம்மால் அதிகபட்சமாக செய்ய முடிந்தது வந்தவர்களை நன்கு வரவேற்று, பாரபட்சமின்றி உபசரித்து மரியாதை செய்வதோடு மட்டுமின்றி சிறந்த ’கேட்டரிங்’ நிபுணர்களை வைத்து தடபுடல் விருந்து செய்து அசத்தலாம். நம்மால் அவ்வளவுதான் முடியும்.  நாமெல்லாம் சாதாரணப் பால் குடித்து வளர்ந்தவர்கள்தானே! ஆனால் திருஞானசம்பந்தர் அப்படிப்பட்டவரா? அன்னை பார்வதியிடம் ஞானப்பால் குடித்து வளர்ந்தவராயிற்றே! அவரது திருமணத்திற்கு வந்தவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும் கிடைத்ததோ பெரிய மகான்களும், முனிவர்களும் பல ஆண்டுகள் தவமிருந்து பெறும் கிடைத்தற்கரிய கைலாசப் பதவி.

அந்த பேறுப்பெற்ற திருமணம் சிதம்பரத்திலிருந்து 12கிமி தொலைவில் இருக்கும் இந்நாளில் ஆச்சாள்புரம் என்றழைக்கப்படும் திருநல்லூர் பெருமணத்தில்தான் நடந்தது. தேவார மூவருள் முதலாமவர் திருஞானசம்பந்தர். சீர்காழியில் சிவபாத இருதயரின் மகனாக முருகப்பெருமானின் அம்சமாகப் பிறந்தவர் சம்பந்தர். ஒருநாள் குழந்தைக்கு பசி வந்து அழுதிட, உமையவள் பார்வதி தேவி, சிவபெருமானுடன் தம்பதி சமேதராகக் காட்சியளித்து, அழுதக் குழந்தைக்கு தனது திருமுலைப்பாலில் ஞானம் கலந்து புகட்டினார். அன்றிலிருந்து அவர் திருஞானசம்பந்தராகி, இளம் வயதிலேயே மிகுந்த ஞானம் பெற்று சீர்காழியில் எழுந்தருளியுள்ள தோணியப்பரை வணங்கி, பதிகங்கள் பல பாடி வந்தார். அந்நிலையில் அவரது தந்தை சிவபாத இருதயருக்கு மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை வந்தது. முதலில் இதை மறுத்த திருஞானசம்பந்தர் பின்னர் இது இறைவனின் லீலை என்பதை உணர்ந்து திருமணத்திற்கு சம்மதித்தார். உடனே உறவினர்கள் கூடி திருநல்லூர் பெருமணத்து நம்பாண்டார் நம்பியின் மகள்  ஸ்ரீஸ்தோத்திரபூரணாம்பிகையை மணம்பேசி முடித்தனர். வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தன்று நாள் குறிக்கப்பட்டது. மணநாளும் வந்தது. ஞானக்குழந்தை திருஞானசம்பந்தரின் திருமணத்தைக் காண ஊரேத் திரண்டு வந்திருந்தது. முகூர்த்த நேரம் நெருங்க மணமகளை வலப்பக்கமாக மணமகனின் அருகில் அமர செய்தனர். தெய்வீகக் களையுடன் விளங்கியவர்களை தம்பதி சமேதராகப் பார்த்த ஊர்மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர். வேதம் ஒலித்தது. மங்கள வாத்தியங்கள் முழங்கின. வேள்வித் தீயினை வலம் வருவதற்காக மணமகளின் திருக்கரம்பற்றி எழுந்தார் திருஞானசம்பந்தர். தான் வலம்வரப் போகும் அந்த வேள்வித்தீ தான் தினம் வணங்கும் சிவபெருமான்தான் என்று கருதினார். இல்வாழ்க்கை ஏற்பட்டாலும் தனது துணைவியுடன் சிவன் திருவடியை சேரவேண்டும் என விரும்பினார். நல்லூரில் இருக்கும் சிவனே உன் பாதம் சேரும் தருணம் இது எனக் குறிப்பிட்டு நல்லூர் பெருமணம் என்று தொடங்கும் பதிகம் பாடினார். கைமேல் பலனாக சிவபெருமான் அருள் கிட்டியது. அங்கே ஒரு வாயிலோடுக் கூடிய பேரொளிப் பிழம்பு ஒன்றுத் தோன்றியது. சம்பந்தரும் அவர் மனைவியும், திருமணத்தைக் காண வந்த அனைவரும் அந்த ஜோதியில் வந்து கலக்குமாறு கூறினார். அங்கு வந்திருந்த ஒரு சிலர் ஜோதியைக் கண்டு அச்சப்பட, அவர்களுக்கு உலகம் பலன் பெற ஞான மெய்நெறியை காட்டுவது நமச்சிவாய மந்திரமே என்பதை விளக்க

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது, நாதன் நாமம் நமச்சி வாயவே” எனத் தொடங்கும் பிரபல பதிகத்தைப் பாடினார். நமச்சிவாய மந்திரத்தை ஞானசம்பந்தரின் வாயால்  கேட்டதன் மகிமையாக திருமணத்தைக் காண வந்த அனைவருமே ஜோதியில் கலந்து முக்தியை அடைந்தனர். இறந்தப் பிறகுதான் மோட்சம் கிட்டும். ஆனால் திருஞானசம்பந்தரின் திருமணத்தில் அனைவருக்கும் வாழும் காலத்திலேயே, அதுவும் மனித உடலோடே (கூண்டு) கைலாச பிராப்தி கிடைத்தது.

ஆச்சாள் என்றால் அது அம்பிகையின் பெயர். ஏறத்தாழ 1300 ஆண்டுகால புராதண சிறப்புக் கொண்ட இக்கோயில் கம்பீரமான ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. ராஜகோபுரத்தை அடுத்து நந்த மண்டபமும் அதனையடுத்து நுணற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளது.நுணற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் ஸ்தோத்திர பூராணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். அடுத்து கிழக்கே பார்த்தபடி சிவலோகதியாகராஜர் சன்னதியும் திருவெண்ணீற்று உமையம்மையின் சன்னதியும் அமைந்துள்ளது. திருமணத்தில் அம்மனே நேரில் வந்து வந்தவர்களுக்கு திருநீற்றை அளித்ததால் இன்றும் இங்கு அம்மன் ’திருவெண்ணீற்று’ உமையம்மை என்றே அழைக்கப்படுவதோடு, இங்கு குங்குமத்திற்கு பதிலாக திருநீறுதான் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்த திருநீற்றை பூசினால் நோய் விலகும். முன்ஜென்ம பாவங்கள் விலகும். பெண்களுக்கு தாலி பாக்கியம் நீடித்திருக்கும் என்பது ஐதீகம்.

ஆச்சாள்புரத்துக்கு ரயிலிலோ, பேருந்திலோ சீர்காழி அல்லது சிதம்பரத்திற்கு சென்றால் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். அருகிலுள்ள ரயில் நிலையம் சீர்காழி. அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார்.விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார்.இந்திரன் போகம் பெற்றான்.சந்திரன் அபயம் பெற்றான்.கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். வசிஷ்டர் பராசரர் பிருகு ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி காட்டி அருள்புரிந்ததும் இத்தலத்தில்தான். காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.சம்பந்தர்.திருநீலகண்ட யாழ்ப்பாணர் முருக நாயனார் திருநீலநக்கநாயனார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இங்கு வந்து வழிப்பட்டால், முன்வினைப் பாவங்கள் நீங்கி முக்தியடைவது நிச்சயம்.




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Saturday, 12 June 2010 14:38 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

72.2%
27.8%
0%

Banner
Maniyosai Ads

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 167 Hits