’சிரகிரி’ வேலவன் சீக்கிரம் வருக'
ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தில் வரும் சிரகிரி வேலவன் ஆலயத்திற்குதான் இவ்வாரம் பிரவேசிக்கப் போகிறோம். சிரகிரி வேலவன் கோயில் இப்பாடலால் அறியப்பட்ட ஒன்று அல்ல. ஸ்ரீ கந்த சஷ்டி கவசம்தான் இக்கோயிலால் உலகிற்கு அறிமுகமானது. ஆம். ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் அரங்கேறியது இக்கோயிலில்தான். அனந்தன் என்ற ’நாக’ராஜனுக்கும், வாயு பகவானுக்கும், பலப் பரிட்சை நடந்தது.
அனந்தன் மகாமேரு பர்வதத்தை சுற்றிப்பிடித்துக்கொள்ள வாயு பகவான் தன் பலத்தால் கடுமையாக வீசி அதை விடுவிக்க முயன்றார். இந்த போராட்டத்தின் போது அந்த பர்வதத்தின் சிகரப் பகுதி முறிந்து பூந்துறை நாட்டில் விழுந்தது. அதுவே சிரகிரி. சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி மற்றும் சென்னிமலை என்று அழைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், ஈரோட்டிலிருந்து தாராபுரம் செல்லும் வழியில் 28கிமி தொலைவில் அமைந்துள்ளது. சென்னிமலை என்ற அந்த மலையின் பெயரே அதன் அடிவாரத்தில் இருக்கும் ஊருக்கும் அமைந்துவிட்டது. மலையின் பரப்பு சுமார் 1700 ஏக்கர்கள் ஆகும். சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சென்னிமலை திருக்கோயில் சிவாலயச் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. சிவாலய சோழ மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்க முருகப்பெருமான் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிசெய்தார்.
தல வரலாறு
சென்னிமலைக்கு சுமார் 3 கிமி தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையில் கொடுமணல் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அது ஒரு காலத்தில் பெருநகரமாய் இருந்தது. அந்த ஊரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பண்ணைக்காரர் ஒருவரின் வீட்டில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்தன. அவற்றை பசுக்கள் மேய்க்கும் ஒருவன் மேய்த்து, அடைத்து வந்தான். அவன் இதைத் தொடர்ந்து செய்து வரும்போது ஒருநாள் நல்ல வளம் மிக்க காராம்பசுவின் மடியில் பால் இல்லாததை கவனித்தான். அவன் அதைப் பற்றி பண்ணையாரிடம் முறையிட அவரும் சிலநாட்களுக்கு அதைத் தொடர்ந்து கவனித்து வந்தார். கூட்டத்தோடு வரும் அந்த பசு திரும்பிவரும் வழியில் தனியாக பிரிந்து சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் உள்ள பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு பின் மீண்டும் பசுக்கள் கூட்டத்தோடு சேர்ந்துவிடுவதை கவனித்தார். அதனால் அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்க்க செய்தார்.
சுமார் ஐந்து அல்லது ஆறு அடி ஆழம் தோன்றியதும் மிகுந்த எழில்வாய்ந்த முகத்துடன் கூடிய முருகர் கற்சிலை ஒன்று கிடைத்தது. அதன் முக அழகில் மெய்மறந்த அவர் அதன் இடுப்புக்கு கீழ் பாதம் வரை சரியான வேலைப்பாடில்லாமல் கரடுமுரடாக இருப்பதை ஒரு குறையாக எண்ணினார். அதனால் ஒரு சிற்பியை அழைத்து அதை வடிவமைக்க நினைத்தார். ஆனால் உளிப் பட்டதுதான் தாமதம், சிலையிலிருந்து ரத்தம் வடிய ஆரம்பித்துவிட்டது. இதைப் பார்த்து பயந்து, சரி இறைவனின் சித்தம் இதுவே என நினைத்து மேற்கொண்டு சிலை வடிக்காமல் நிறுத்திவிட்டனர். இப்பவும் சென்னிமலை ஆண்டவரின் திருவுருவம் இடுப்பிலிருந்து பாதம் வரை வேலைப்பாடுகள் ஏதுமின்றி இருப்பதை காணலாம்.
கோயில் அமைப்பு
சென்னிமலைக் கோயில் அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்லும் பாதை செங்குத்தாக இல்லாமல் பக்தர்கள் சுலபமாக ஏறிச் செல்லும் வகையில் 1320 படிகளுடன் அமைந்திருக்கிறது. பக்தர்களுக்கு சிரமம் தெரியாமல் இருப்பதற்காக வழிநெடுக இளைப்பாற இடங்கள், குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதைத் தவிர மலைப்பாதை வழிநெடுக விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சியம்மன்.... என நிறைய சன்னதிகள் இருக்கின்றன. வாகனங்கள் மூலம் செல்ல தார்சாலையும் இருக்கிறது.
இக்கோயிலில் மூலவர் செவ்வாய் கிரகமாக நடுநாயகமாக வீற்றிருக்க அவரைச் சுற்றி எட்டு கிரகங்களும் எழுந்தருளியிருப்பது சிறப்பு. இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவகிரகங்களையும் வணங்கி வழிப்பட்ட பலன் உண்டு.
இந்த கோயிலில் முருகப்பெருமான் பழத்திற்காக கோபித்துக் கொண்டு தண்டாயுதபாணியாக மலைமேல் ஏறி நிற்பதால் வள்ளி, தெய்வானை இருவரும் முருகனை திருமணம் செய்ய வேண்டி தவமிருந்து அங்கேயே தனிப்பெருங்கோயில்களில் வீற்றிருக்கின்றனர்.
இத்தலத்தின் மற்ற சிறப்புகள்
18 சித்தர்களுள் ஒருவரான புன்நாக்குச்சித்தர் வாழ்ந்து முக்தி அடைந்த இடம்.பொய் சொன்ன நாக்கு புன்நாக்கு என அறிவுறுத்தி வந்ததால் புன்நாக்கு சித்தர் எனவும், நாக்கை பின்பக்கமாக மடித்து அருள் வழங்கியதால் பின்நாக்குச்சித்தர் எனவும் வழங்கப்படுகிறார். இவர் தவமிருந்த குகை ஒன்றும் சென்னிமலையில் இருக்கிறது.
முருக பக்தர்கள் மனம் உருக பாராயணம் செய்யும் உலக பிரசித்திப்பெற்ற ஸ்ரீகந்த சஷ்டி கவசம் செய்யப்பட்டதும் இதே திருத்தலத்தில்தான்.
ஒவ்வொரு பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிதும் மழையில்லாமல் வறண்ட கோடைக்காலத்தில் மலைக்கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள மாமாங்கத் தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்க தீர்த்தமானது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்கும் அதிசயமானது.
எல்லா கோயில்களிலும் விநாயகரை முதலில் துதித்து பின்னரே மற்ற கடவுள்களை வழிப்படுவோம். ஆனால் இங்கு தன் அண்ணன் விநாயகருடன் பழத்திற்காக ஏற்பட்ட சண்டையினால் கோபத்துடன் தண்டாயுதபாணியாக மலைமேல் ஏறி நிற்பதால் இங்கே தினசரி பூஜைகளில் மூலவர் சென்னிமலை ஆண்டவருக்கு நைவேத்திய பூஜைகள் முடிந்த பின்னரே சன்னதி விநாயகருக்கு பூஜைகள் செய்யும் வழக்கம் இருக்கிறது. முருகர் குழந்தைக் கடவுள் என்பது சரியாகதானிருக்கிறது.
உற்சவம்
கோயில் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இங்கே ஆகம விதிமுறைப்படி ஆறுகால பூஜைகளும் நடைப்பெறுகிறது. வருடாந்திர உற்சவமாக, தைப்பூச தேர் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவை மட்டுமின்றி தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, நவராத்திரி, கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களும் விசேஷ நாட்கள் ஆகும்.
எப்படி செல்வது:
சென்னிமலைக்கு தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் நேரடி பேருந்துகள் இருக்கின்றன. ஈரோடு தாராபுரம் வழியில் இவ்வூர் அமைந்திருப்பதால் இந்த ஊர்களுக்கு பேருந்திலோ, ரயிலிலோ சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளும் உள்ளன.
எங்கே தங்குவது:
சென்னிமலை அடிவாரத்திலேயே ஒரு சில ஓட்டல்கள் உள்ளன. இதைத் தவிர ஈரோடு, தாராபுரம் போன்ற ஊர்களில் தங்கியிருந்தும் வந்து தரிசிக்கலாம்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





Very glad to read your write up about chennimalai. I appreciate your efforts in giving maximum details about chennimalai hill temple.
One more important message is missing .. in 1984 a bullock cart climbed to hill top by stepping the entire 1320 steps - which was witnessed by several lakhs people and it was a kind of world news in those days.