இன்றும் பல கோயில்களில் பிற மதத்தவர்கள் உள்ளே நுழையக்கூடாது, சில ஜாதியினருக்கு அனுமதியில்லை என ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கின்றன. இதைப் பார்த்தே சிலர் நாத்திகம் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இதுப்போன்ற தீண்டாமைகளை ஏற்படுத்தியது யார்? கடவுளா? கோடானுக்கோடி உயிர்களையும் படைத்திட்ட இறைவனுக்கு எல்லாரும் ஒன்றுதான். அவனது சபையிலே ஜாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்று எந்த பேதமும் இல்லை என்பதை கடவுளே நேரடியாக விளக்கிய இடம் உடுப்பி.
கர்நாடக மாநிலம் மங்களூரிலிருந்து 60 கிமீ தொலைவில் இருக்கிறது உடுப்பி. இங்கு சந்திரேஸ்வரா, அனந்தேஸ்வரா, ஸ்ரீ கிருஷ்ணா என மூன்று கோயில்கள் உள்ளன. ஐதீகப்படி முதல் இரண்டு ஆலயங்களையும் தரிசித்துவிட்டுத் தான் ஸ்ரீகிருஷ்ணா கோயிலுக்கு செல்லவேண்டும். உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் விக்கிரகம் பேரழகு வாய்ந்தது. அழகுக்கு அழகூட்டும் வகையில் நிறைய நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இங்கே இன்னொரு விசேஷம் என்னவென்றால் மற்றக் கோயில்களைப் போலில்லாமல், ’கனகணகிண்டி’ என்றழைக்கப்படும் ஒரு சிறிய சாளரம் வழியாகதான் நாம் கடவுளை தரிசிக்கமுடியும். ஏன்? உடுப்பி ஸ்ரீகிருஷ்ணர் சிலையின் கதையையும், கங்கணகிண்டியின் பின்னனியையும் பார்க்கலாம்.
உலக நாடுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டு, பின்பற்றும் விதிகள் சில இருக்கிறது. உதாரணத்திற்கு நியூட்டன் விதி, டெய்லர் விதி, க்ரெக்கரி விதி... இப்படி சில இயற்கை நியதிகளை உலகிற்கு கண்டுப்பிடித்து விளக்கிய விஞ்ஞானிகளின் பெயராலேயே அந்த விதிகளை அடையாளம் கண்டுக்கொண்டாலும், அவர்களுக்கு அழியாப் புகழ் பெற்றுத் தந்தது சந்தேகமின்றி அவர்களது இந்த அடிப்படை நியதிகள்தான். ஆனால் நியூட்டனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எளியத் தத்துவங்கள் மூலம் அந்த உண்மைகளை கண்டறிந்த நாடு நம் இந்தியா. அதைக் கண்டறிந்து நம்மை வழிப்படுத்தி, நம் நாட்டு கலாச்சாரத்திற்கு பெரும் புகழைத் தேடித் தந்தவர் மத்வாச்சாரியார்.
மத்வர் என்ற மத்வாச்சாரியார் (1238 – 1317) இந்தியாவின் உலகமறிந்த மூன்று மதத்தத்துவ போதகர்களில் ஒருவர். மற்ற இருவர் அத்வைதத்தை நிலைநாட்டிய ஆதி சங்கரரும் விசிஷ்டாத்வைதத்தை நாடெங்கும் பரப்பிய இராமானுஜரும் ஆவர். இம்மூவருடைய தத்துவநூல்களின் அடிப்படையில் வழிவழியாக வந்த பல்வேறு மதக்கோட்பாடுகளின் மேன்மையால்தான் இன்றும் ஆன்மிகத்தில் தலை சிறந்த தேசமாக பாரதம் கருதப்படுகிறது. மத்வர் துவைதம் என்ற தத்துவ இயலை நிலைநாட்டினார். அப்படிப்பட்ட மத்வரால் நிறுவப்பட்டதுதான் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணா கோயில்.
உடுப்பி கோயிலைப் பற்றி இரண்டு விதமான கதைகள் கூறுகின்றனர். துவாரகையிலிருந்து ஒரு கப்பல் மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது அது மால்பே என்னும் இடத்தினை கடக்கும் சமயம் பெரும் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்டது. கிட்டத்ட்ட அது மூழ்கிவிடும் என்ற நிலையில் அதை கரையிலிருந்து கவனித்த மத்வாச்சாரியார், தன் காவித் துண்டின் நுனியை காற்றில் ஆட்டி தனது மகிமையினால் சூறாவளியின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கப்பலை பாதுகாப்பாக கரை சேர்த்தார். இதனால் மிக்க மகிழ்ச்சியடைந்த அதன் தலைவன் அவரை வணங்கி அவருக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள ஏதேனும் பரிசுத் தர விரும்புவதாகவும், அவர் எதைக் கேட்டாலும் தட்டாமல் தருவதாகவும் கூறினான். அதற்கு மத்வர் கப்பலின் அடித்தளத்தில் இருந்த கோபி சந்தனத்தால் ஆன பாறாங்கல் வேண்டுமென்றுக் கேட்டார். உயர்ந்ததாக ஏதேனும் கேட்காமல் அதை ஏன் கேட்கிறார் எனப் புரியாமல் அதைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.
அது சாதாரண பாறாங்கல் இல்லை என்பது அவன் உணரவில்லை. இன்றும் மத்வ மதத்தினர் கோபி சந்தனத்தால்தான் சிறு திலகம் போன்ற புனித சின்னம் இட்டுக் கொள்கின்றனர். அந்த புனிதமான கோபி சந்தனத்தாலான பாறையின் உள்ளே மறைந்து இருந்ததுதான் நாம் இன்றும் உடுப்பியில் தரிசிக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம். அதை தனது ஞானதிருஷ்டியினால் தெரிந்துக் கொண்ட மத்வர் அதன் உள்ளே கையைவிட்டு சாலிகிராமத்தினால் ஆன ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகத்தை வெளியே எடுத்து அதை சுத்தப்படுத்தி மடத்தில் நிறுவினார் என்பது ஒரு கதை. இன்னொரு கதையின்படி சூறாவளிக் காற்றில் அந்த விக்கிரகமும் சேர்ந்தே கடலில் மூழ்கிவிட்டது. பின்னர் மத்வாச்சாரியார் தனது தத்துவங்களை பரப்ப செய்யும் பயணத்தில் உடுப்பி வந்து சேர்ந்தப் போது, திடீரென ஒரு ஒளித்தோன்றிக் கூறியதின் பேரில் கடலில் மூழ்கிய அந்த சிலையை மீட்டு வந்து ஸ்தாபித்தார்.
அவ்விக்கிரகம், ‘விசுவகர்மா என்ற தெய்வச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபரயுகத்தில் ஸ்ரீருக்மணியால் பூஜிக்கப்பட்டு, பிற்பாடு துவாரகை மூழ்கியபோது கடலில் மூழ்கிய விக்கிரகம் அது’! என்று மத்வாச்சாரியாரின் வாழ்க்கையில் நடந்த (அல்லது, அவர் நடத்திய) பல அற்புதங்களைப் பற்றி அவர் காலத்திலேயே வாழ்ந்த நாராயண பண்டிதர் என்பவர் தான் இயற்றிய மத்வவிஜயம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அன்றிலிருந்து இன்று வரை அங்கு அந்த விக்கிரகத்திற்கு சிறப்பாக பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த கோயிலின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக 16ம் நூற்றாண்டில் ஒரு சம்பவம் நடந்தது. கனகதாசன் என்றொரு தீவிர பக்தன் கிருஷ்ணரை தரிசிக்க உடுப்பி வந்தான். ஆனால் அவன் தாழ்த்தப்பட்ட ஜாதிக்காரன் எனக் கூறி உள்ளே அனுமதிக்கப் படவில்லை. அதனால் அவன் மனம் நொந்துப் போனான். அவனது பக்தியின் மேன்மையை உணர்ந்துக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அவன் தரிசிக்க வசதியாக கோயில் கர்ப்பகிரகத்தின் பின்பக்க சுவரில் ஒரு துவாரம் ஏற்படுத்தி தனது முகத்தையும் அதன் பக்கமாகத் திருப்பிக் கொண்டார். அந்த சாளரம்தான் ’கனகணகிண்டி.’ இப்பொழுதும் நாம் உடுப்பி சென்றால் அந்த சிறு சாளரம் வழியாகத்தான் தரிசிக்கவேண்டும்.
காலை 5 மணிக்கு நடைத்திறந்து தினமும் பல பூஜைகள் சிறப்பாக நடைப்பெறுகின்றது. மத்வநவமி, ஸ்ரீராமநவமி, நவராத்திரி, துளசிப் பூஜை, பாகிரதி ஜென்மதினம், கிருஷ்ண லீலோத்ஸவம், என ஆண்டுதோறும் பல பண்டிகைகளும், உற்சவங்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
உடுப்பிக்கு செல்ல கர்நாடக மாநிலம் முழுவதிலிருந்தும், நிறைய பேருந்துகள் இருக்கிறது. உடுப்பியிலேயே ரயில் நிலையமும் இருக்கிறது. இருப்பினும் அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் மங்களூர். உடுப்பி சென்று வந்தால் அருகிலேயே தர்மஸ்தலா, சிருங்கேரி என புகழ்பெற்ற ஆலயங்களுக்கும் சென்று வரலாம்.
| < Prev | Next > |
|---|













This is very use full information