ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பையும் பிரதிபலிப்பதில் அந்நாட்டு ஆடல், பாடல் கலைகளுக்கு மட்டுமின்றி கட்டடக் கலைக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இந்துக் கோயில்கள், கிறித்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய வழிப்பாட்டு தலங்கள், புத்த மடங்கள் இதுப் போன்ற கட்டடங்களுக்கு இது இந்து கோயில், இது கிறித்தவ தேவாலயம் என்று புரிய வைக்க பெயர்பலகைகள் எதுவுமே தேவையில்லை.
அந்தந்த கட்டடங்களின் அமைப்பை பார்த்தாலே தெரிந்துவிடும். நம்மூர் கோயில்களில் கூட அதைக் கட்டிய ராஜாக்கள் தங்களது காலத்தை, அதாவது இது சோழர் காலத்துக் கோயில், அல்லது நாயக்கர் காலத்து கோயில் என்பதை உணர்த்தும் வகையில் அவரவர்களுக்கென ஒரு ஸ்டைல் வைத்திருந்தனர். அதேப் போல இந்தியாவின் பல மாநிலக் கோயில்களிலும் பல வகையான கட்டடக் கலையை நாம் பார்க்கலாம். இதுப்போல மூன்று மாநிலங்களின் கட்டடக் கலையை ஒரே இடத்தில் அதுவும் அதிகப் பொருட்செலவு செய்யாமல் பார்க்கும் அற்புத வாய்ப்புக் கிடைத்தால்...
அதற்காக நாம் அதிகம் மெனகெட வேண்டியதில்லை. சென்னையிலிருந்து 110கிமி தொலைவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அருகே தென்னாங்கூர் சென்றால் அங்கே கண்ணுக்கு பல விருந்துகள் காத்திருக்கிறது. தென்னாங்கூர் பாண்டுரங்கன் - ரகுமயி கோயிலின் ராஜகோபுரம் தென்னாட்டு கலையிலும், கருவறை விமானம் ஒரிசா பூரி ஜகன்னாதர் ஆலயத்தைப் போலவும், பாண்டுரங்கன் - ரகுமயி விக்கிரகங்கள் மகாராஷ்டிரா பண்டரிப்புரத்தை ஒட்டியும் இருப்பது தனிச்சிறப்பு.
முன்னொரு சமயம் மிகப் பாழடைந்த சிறிய கிராமமாக இருந்த தென்னாங்கூர் இன்று ஒரு கலாச்சார மையமாக திகழ முக்கியக் காரணம் அங்கு வாழ்ந்து, கங்கையில் ஜலசமாதியடைந்த ஸ்ரீஹரிதாஸ் கிரி சுவாமிகளே!
ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகள்
ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய மடங்களில் ஒன்றான ஜோதிர்மடதிதின் பீடாதிபதியாக இருந்தவர் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகள். அவரது சீடர்களில் பிரதானமானவர் ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகள். ‘வைகுண்டத்திலோ அல்லது எப்பொழுதும் எனையே நினைத்து தவம் செய்துக் கொண்டிருக்கும் தபஸ்விகளின் இதயத்திலோ நான் வாழ்வதில்லை. எப்பொழுதும் எனது பெயரைக் கூறி ஆனந்தமாக நடமாடுபவர்கள் மத்தியில்தான் நான் வாழ்கிறேன்....’ என்று கிருஷ்ண பரமாத்மா கூறியதை தன் குருவின் வாயால் கேட்ட ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகள் பகவானின் நாமத்தைப் பரப்புவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர்.
சென்னை நாரத கான சபாவில் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும், காலை வேளைகளில்
சுவாமிகள் நடத்திய நாமசங்கீர்த்தன வைபவத்திற்கு மக்கள் திரள்திரளாக திரண்டு வருவர். மார்கழி மாத அதிகாலை குளிரில் வெண்பொங்கல் சாப்பிடுவது மட்டுமல்ல சுவாமிகளின் கிணீர் குரலில் பாண்டுரங்க பஜனைகளை கேட்பதும் கூட தனிசுகம். நாமசங்கீர்த்தனம் செய்து வந்த சுவாமிகளுக்கு தென்னாங்கூரில் ஒரு கலாச்சார மையம் அமைக்க வேண்டும் என்று ஒரு தீராத ஆசை இருந்து வந்தது. இந்நிலையில் ஒருநாள் சுவாமிகளின் கனவில் அவரது குருநாதர் தோன்றி உடனே பண்டரிப்புரம் கோயிலுக்கு செல்லுமாறு பணித்தார். குருவின் கட்டளையை ஏற்று மறுநாளே பண்டரிப்புரம் சென்றார். அங்கே அவரைக் கண்டதும் அந்தக் கோயில் அர்ச்சகர் ஒரு சிறிய பாண்டுரங்க சுவாமிகளின் விக்கிரகத்தை கொண்டுவந்து கொடுத்துவிட்டு, திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து குழந்தைப் பெற்ற தம்பதிகள் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு அச்சிலையைக் கோயிலுக்கு கொடுத்ததாகவும், முதல் நாள் இரவு பாண்டுரங்கன் அவரது கனவில் தோன்றி சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளின் சீடர் ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகள் மறுநாள் தன்னை தரிசிக்க வரும்போது அந்த விக்கிரகங்களை அவரிடம் சேர்ப்பிக்குமாறு கூறியதாக சொல்லி முடித்தார்.
இறைவனின் ஆக்ஞையால் சுவாமிகள் தென்னாங்கூரில் பாண்டுரங்கனுக்கு கோயில் கட்ட ஆரம்பித்தார். தென்னாங்கூர் அவரது ஊர் என்பது மட்டுமின்றி, மதுரை மீனாட்சியம்மனின் அவதாரத் தலம் என்பது கூடுதல் சிறப்பு.
இக்கோயில் திருப்பணிகள் முடிவடையும் முன்பே 1994ல் ஸ்ரீஹரிதாஸ்கிரி சுவாமிகள் இமயமலை சாரலுக்கு அருகே ஜலசமாதியடைந்தார்.
கோயில் அமைப்பு
இந்த கோயில் தமிழ் கலாச்சாரத்தை மட்டுமின்றி நம் இந்திய கலாச்சாரத்திற்கே ஒரு அடையாளமாக இருக்க விரும்பி இக்கோயிலை மூன்று விதமான கலைகளை ஒருங்கிணைத்து கட்டியுள்ளனர். முகப்பு ராஜகோபுரம் தென்னிந்திய கோயில்களைப் போல் இருக்கிறது. பூரி ஜகன்னாதர் கோயிலைப் போன்று இருக்கும் கருவறை விமான கோபுரம் 120 அடி உயரம் இருக்கிறது. அதன் தங்க விமானம் மட்டும் 10 1/2 அடி உயரம் உள்ளது. பாண்டுரங்கன் சிலை 10 1/2 அடியும், ரகுமயி சிலை 8 1/2 அடியும் இருப்பது பார்ப்பவர் கருத்தை கவரும் வகையில் இருக்கிறது. இங்குள்ள சில மண்டபங்கள் மிக நீண்டு அகண்டதாக இருந்தாலும் குறுக்கே, நெடுக்கே தூண்கள் இல்லாமல் வெளிநாட்டில் உள்ள ஒரு சில ஆன்மீக மையங்களின் கலையை ஒத்து நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசிப்பவர்கள் அப்படியே பல மாநில கலாச்சாரங்களை பின்பற்றி கட்டப்பட்டுள்ள தென்னாங்கூர் பாண்டுரங்கன் - ரகுமயி கோயிலுக்கும் சென்று தரிசித்து வரலாம்.
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|




