இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் சமம். அவனுக்கு இது மனிதன், இது யானை, இது பூனை, என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. இதை நன்கு உணர்ந்த இந்து மதத்தில் விலங்குகளுக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. யானை என்றால் விநாயகர், அவரது வாகனம் சுண்டெலி. குரங்கு அனுமாரின் வடிவம், பாம்பென்றால் ஆதிசேஷன், முருகனின் வாகனம் மயில், விஷ்ணுவுக்கு வாகனம் கருடன். காக்கையைக் கூட புறக்கணிக்கவில்லை. காகம் சனி பகவானின் அடையாளம். இப்படி ஒவ்வொரு உயிர்களையும் ஒரு கடவுளோடு சம்பந்தப்படுத்தி எல்லா உயிர்களையும் மதிக்கக் கற்றுத் தருகிறது இந்து மதம்.
இப்படி எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் பசுவிற்கு என ஒரு உயரிய இடம் உண்டென்றால் காரணம் இல்லாமலா இருக்கும்? மன்னார்குடி அருகில் உள்ள திருப்பாதாளேச்சுரம் (தற்போது பாம்பணி) தலத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தநாயகி சமேத நாகநாத சுவாமி திருக்கோயிலைப் பற்றி அறிந்தால் இறைவனின் திருவிளையாடலில் பசுவிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இன்று பசுவிற்கு இருக்கும் தனி மவுசிற்கு காரணமும் விளங்கும்.
தல வரலாறு:
ஒருமுறை சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது மாலை நேரமானதால் இப்பொழுது இத்தலம் இருக்கும் இவ்விடத்தில் இளைப்பாறி தன சீடனிடம் அஸ்தி மூட்டையைக் கொடுத்து விட்டு சந்தியாவந்தனம் செய்ய சென்றார். அப்போது சீடன் அஸ்தி மூட்டையைப் பிரித்து கலசத்தைப் பார்த்தான். கலசம் முழுவதும் தங்கமாக நிரம்பியிருந்தது. உடனே பயந்துப் போய் மூடி வைத்துவிட்டான். சுகல முனிவர் திரும்பி வந்ததும் அவர்களது பயணம் காசியை நோக்கிக் கிளம்பியது. கங்கைக் கரையில் அஸ்தி மூட்டையைப் பிரித்தால் உள்ளே சாம்பல் இருப்பதைப் பார்த்த சீடன் அதிர்ச்சியடைந்து முன்பு சந்தியாவந்தனம் செய்த இடத்தில் கலசத்தில் சாம்பலுக்கு பதில் தங்கம் இருந்த விஷயத்தைக் கூறினான். உடனே அவர் ‘அப்படியானால் அதுவே காசியை விட புனிதமான இடம்’ என்று கூறி மீண்டும் இந்த இடத்திற்கே வந்து ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற குளத்தின் கரையில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி ஆலயம் அமைத்து அக்குளத்திலேயே அஸ்தியையும் கரைத்துவிட்டு இங்கேயே தங்கி விட்டார்.
அப்போது அவர் ஒரு பசுவை வளர்த்து வந்தார். ஒருநாள் பசு மேயச் சென்றப்போது ஒரு புற்றின் அருகில் சென்றதும் தன்னை அறியாமல் புற்றின் மீது ஏறி நின்று தானாகவே பால் சொரிய ஆரம்பித்தது. மறுநாளிலிருந்து இதையே வாடிக்கையாகக் கொண்டு தானாகவே சென்று அந்த புற்றின் மீது ஏறிநின்று பால் சொரிந்துவிட்டு வர ஆரம்பித்தது. தினமும் மேய்ச்சல முடிந்து திரும்பியதும் பசு பால் கொடுக்காததைக் கண்டு அதிசயித்த சுகலர் மறுநாள் பசுவை மேயவிட்டு தானும் அதைப் பின் தொடர்ந்து சென்று என்ன நடக்கிறது என அறிய விரும்பினார். அங்கே பசு ஒரு புற்றின் மீது ஏறி பால் சுரப்பதைக் கண்டு பசு ஏதோ ஒருக் கோபத்தால் பாலை வீணடிக்கிறது என எண்ணி அதை ஒரு கம்பால் அடித்தார். மாடு உடனே கோபத்துடன் புற்றை முட்ட புற்றுப் பிளந்து உள்ளே இருந்த லிங்கம் வெளிப்பட்டது. பசு ஓடிச்சென்று ஒரு குளத்தில் விழுந்து இறந்தது. உடனே சிவபெருமான் காட்சி கொடுத்து பசுவை உயிர்ப்பித்து அதன் பால் அபிஷேகத்தால் மனம் குளிர்ந்ததாகத் தெரிவித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த பசு தன்னிடமிருந்து கிடைக்கும்
பொருட்கள் எல்லாம் ஈசனுக்கே அர்ப்பணம் ஆக வேண்டும் என்று கேட்டது. சிவபெருமானும் மிகவும் மனம் மகிழ்ந்து வரம் அருளினார். அன்றிலிருந்து பசுவிடம் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமியம் என அனைத்துமே புனிதமானப் பொருட்களாகக் கருதப்படுகிறது. இவ்வகையில் சுயம்புவாக உருவான சிவனை சுகலரும் வணங்கி பெரும்பேறு அடைந்தார்.
தோஷ நிவர்த்தி மற்றும் பரிகாரங்கள்:
விஷ்ணு பகவான் சயனித்திருக்கும், அஷ்ட நாகங்களான வாசுகி, கார்கோடன், பத்மன், மகாபத்மன், சங்கன், சங்கபாலன், குளிகன், அனந்தன் ஆகிய அனைவருக்கும் தலைவரான ஆதிசேஷன் திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தபோது உண்டான விஷத்தை சிவபெருமான் உண்டதால் தனக்கும் தோஷம் உண்டானதாகக் கருதி பரிகாரம் செய்ய எண்ணினர். அப்பொழுது பாதாளத்தில் இருந்து உண்டான பாதாளேச்வரரை வழிப்பட்டால் தோஷம் தீரும் என அசரீரி கேட்டதால் ஆதிசேஷன் தனஞ்செய முனிவராக மனித முகமும் சர்ப்ப உடலுடன் தோன்றி இத்தலத்திற்கு வந்து சுயம்புவாக உருவான சிவலிங்கத்தை வழிப்பட்டு தோஷ நிவர்த்திப் பெற்றார்.
அன்று முதல் திருப்பாதாளேச்வரர் சமஸ்கிருதத்தில் சர்ப்பபுரீஸ்வரர் என்று அழைக்கப்பட்டு தற்போது தமிழில் நாகநாத சுவாமி என்றழைக்கப்படுகிறார். ஆதிசேஷனும் தனஞ்செய முனிவராக சுவாமியை வணங்கிய நிலையில் தனி சன்னதியில் எழுந்தருளி ராகு, கேது தோஷ நிவர்த்தி வழங்குகிறார்.
சிறப்பம்சங்கள்:
சிம்மதட்சிணாமூர்த்தி:
இங்கு குருபகவான் சிம்ம மண்டபத்தில் காட்சி தருவது வேறெங்கும் காண முடியாதக் காட்சியாகும். பொதுவாக சுவாமி விமானத்தில் ரிஷபமும் அம்மன் விமானத்தில் சிம்மமும்தான் இருக்கும் ஆனால் இங்கு சுவாமி விமானத்தில் சிம்மம் காட்சி தருவதால் இங்கு சிம்ம தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பச்சை திராட்சை நிவேதனம்:
ஒரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உண்டான போரில் தேவர்கள் தோற்று அசுரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இதையறிந்த முசுகுந்த சக்ரவர்த்தி இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அசுரர்களுடன் போரிட்டு வென்றார். அதற்கு பரிசாக இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும் கொடி முந்திரியையும் (திராட்சை) அளித்தார். முசுகுந்த சக்ரவர்த்தியும் அந்த பரிசோடு திருவாரூர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவருக்கு, திருப்பாதாளேச்வரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று திராட்சையை நிவேதனம் செய்ய சொல்லி அசரீரிக் கேட்டதால் அவரும் அதை அப்படியேப் பின்பற்றினார். அன்றிலிருந்து இத்தலத்தில் கொடி முந்திரி எனும் பச்சை திராட்சை நிவேதனமாக வழங்கப்படுவது தனிச்சிறப்பு.
மாம்பழச் சாறு அபிஷேகம்:
திருப்பாற்கடலில் அமுதம் கடையும்போது 4 மாங்கனிகள் தோன்றின. பிரம்மன் அதில் ஒன்றை விநாயகருக்கும் மற்றொன்றை மாம்பழத்திற்காக
கோபித்து மலை மேல் ஏறி அமர்ந்த ஆறுமுகனுக்கும் கொடுத்தார். மூன்றாவது கனியை காஞ்சியில் முளைக்கும்படி ஊன்றிவிட்டு நான்காவது பழத்தை இத்தலத்திற்கு எடுத்து வந்து பழத்தை நன்கு பிழிந்து நாகநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். பிறகு அதன் கொட்டையை பிரம்ம தீர்த்தத்தின் வடகரையில் ஊன்றினார். அது முதல் மாமரம் இத்தல விருட்சமாகியது. இன்றும் மாம்பழச்சாற்றால் நாகநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோயில் அமைப்பு மற்றும் தொன்மை:
நாகநாத சுவாமி கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அவரது சன்னதி வாசலில் வடபுறம் நோக்கி சுவாமியை கும்பிட்ட நிலையில் மனித முகமும், சர்ப்ப உடலுமாய் தனஞ்செய முனிவராக ஆதிசேஷன் எழுந்தருளியிருகிறார். நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சண்டிகேசுவரர், விஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமண்ய சுவாமி, துர்க்கை, கஜலட்சுமி, ஞான சரஸ்வதி, சனீஸ்வரர் ஆகியோரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் சுவாமியை தரிசனம் செய்து நவக்கிரகங்களை வலம் வந்தால் “ஓம்” என்ற ஓங்கார வடிவில் நம்முடைய சுற்று முடிவடைவது வேறெந்த தலங்களிலும் இல்லாத சிறப்பாகும். மேலும் சிவஸ்தலங்களில் அம்மன் சன்னதியைத் தாண்டிய பிறகே நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் அம்பாள் சன்னதி தனியாக பலிபீடம், கொடிமரத்தின் அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
1922-25 ம் வருடத்து கல்வெட்டு ஆராய்ச்சி அறிக்கையில் இத்தலத்தில் 7 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகள் இரண்டும் 12ம் நூற்றாண்டில் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டு ஒன்றும் அடங்கும். மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கிபி 1180 ஆம் ஆண்டிலிருந்துதான் கல்வெட்டுகள் உள்ளன. திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் 7ம் நூற்றாண்டில் இங்கு வந்து பாடியதும், முதலாம் இராஜராஜ சோழன் காலத்து கிபி 985ம் ஆண்டு கல்வெட்டுகளும் இக்கோயிலின் பழமையை பறைச்சாற்றுகின்றன.
திருவிழாக்கள்:
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி நவராத்திரி பூஜைகள்,ஐப்பசி மாதம் நிறைபணி, ஐப்பசி பௌர்ணமி, ஐப்பசி கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகை சோமவாரம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், தைப்பொங்கல், மாசி மகம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் என வருடத்தின் 12 மாதங்களிலும் பல உற்சவங்கள் நடைப்பெறுகின்றன.
தைப்பூச தீர்த்தவாரி:
முன்னொருக் காலத்தில் தேவசர்மா என்ற அந்தணர் ப்ருகு மகரிஷியின் மகள் காந்திமதியை மணந்தார். பெயருக்கேற்ற ரூபவதியான அவள் தனது அழகில் சற்று கர்வம் கொண்டிருந்தாள். அதனால் ஒருசமயம் தேவசர்மாவும் வீட்டில் இல்லாத வேளையில் உண்ண உணவுக் கேட்டு அகத்தியர் அவள் வீட்டு வாசலுக்கு முன் வந்து நின்று குரல் கொடுத்தப்போது தன் அழகை ரசித்தவாறு அவரை உதாசீனப்படுத்தினாள். அதனால் ஆத்திரமடைந்த அகத்தியர் அவளை பிசாசாக மாற சாபமிட்டார். வீடுத் திரும்பிய தேவசர்மா விஷயமறிந்து தன் மனைவியைத் தேடிப்பிடித்து சமாதானப்படுத்தி இச்சாபத்திற்கு பரிகாரம் வேண்டி ஒவ்வொரு கோயிலாக சென்றார். அப்பொழுது பரத்வாஜ முனிவர் அவர்களது நிலைமை அறிந்து , ‘ தை மாதம் பூச நட்சத்திர தினத்தில் திருப்பாதாளேச்வரம் பாம்பணி ஆற்றில் தீர்த்தமாடும் போது தரிசனம் செய்து நீங்களும் தீர்த்தமாடி நாகநாத சுவாமியை வழிப்பட்டால் சாபம் நீங்கும்’ என்றார். அவ்வாறே சாபம் நீங்கி இத்தலத்திலேயே தங்கி 4 குழந்தைகளையும் பெற்று நாகநாத சுவாமிக்கு பணிவிடை செய்து வந்தனர். இன்றும் இக்கோயிலில் தைப்பூச தீர்த்தவாரி மிகவும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
எங்கு இருக்கிறது? எப்படி செல்வது?
இக்கோயில் திருவாரூர் மாவட்டம் ராஜ மன்னார்குடிக்கு வடக்கே 2 கிமீ தொலைவில் பாம்பணி ஆற்றின் வடபுறம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு மன்னார்குடியில் இருந்து டவுன்பஸ், மினிபஸ் வசதிகள் உண்டு. ஆட்டோவிலும் வரலாம். மன்னார்குடிக்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களிலிருந்து நேரடி பேருந்து வசதி உண்டு. தஞ்சாவூர், கும்பகோணம் வரை ரயிலில் வந்துவிட்டு அங்கிருந்து மன்னார்குடிக்கு பேருந்திலும் வரலாம்.
பிரதோஷ வழிப்பாட்டில் பேர்போன இத்தலத்தில் ஒரு பிரதோஷ பூஜையை தரிசனம் செய்தால் 3 கும்பாபிஷேகம் தரிசனம் செய்த புண்ணியமும் 108 சிவாலய தரிசனம் செய்த பலனும் கிடைக்கும் என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இவ்வளவு சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் பிரதோஷ வழிப்பாட்டில் கலந்து கொண்டு பூர்வ ஜென்ம வினையில் ஏற்பட்ட தோஷம், சங்கடங்களிலிருந்து விடுப்பட்டு நாகநாதசுவாமி அருளைப் பெறுங்கள்.
-எல்லோரா விஜயா
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|





IT IS NICE TO READ AND SO MANY IMPORTANT NEWS ARE WRITTEN.REALLY SUPERB