தாய் நாடு, தாய் மொழி, பூமித் தாய் என நாம் ஒவ்வொன்றையும் பெண்ணின் வடிவமாக காண்கிறோம். பெண்ணில்லாவிட்டால் உலகம் நின்றுவிடும். நாம் நம் கால் சுண்டு விரலை லேசாக அசைப்பதற்கு கூட சக்தி வேண்டும். ’சக்தி இல்லையேல் சிவம் இல்லை’என்கிறோம்.
அந்தளவிற்கு சக்தியின் அவசியம் இன்றியமயாதது. அதனால்தான் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நிறைய கிராம தேவதைகள் வழிப்பாடு பிரபலமாக இருக்கிறது. அதுப்போல உள்ளூர்வாசிகளுக்கு மட்டும் கிராம தேவதையாக இருந்து, பின்னர் தன் சக்தியால் பல மகிமைகளை செய்து, இன்று உலகளவில் பிரசித்தமாயிருக்கும் ஆலயத்திற்குதான் இவ்வாரம் பிரவேசிக்கப் போகிறோம். திருச்சி அருகே இருக்கும் சமயபுரம் சென்று நம் அனைவரின் தாயான மாரியம்மனை தரிசித்து நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற செய்யும் சக்தியை பெற்று வருவோம்.
புராணம்: சிவபெருமான் விஷத்தை உண்டு தாருகாசுரனை வதம் செய்தார் என்பது புராணம். அப்பொழுது சிவன் அந்த விஷத்தை, மகா காளியாக உருவாக்கினார். அந்த காளியின் ஸ்வரூபமாகத்தான் சமயபுர மாரியம்மன் விளங்குகிறார். மாரியம்மனுக்கு சீதள கௌரி, மகமாயி என்றும் வேறு பெயர்கள் உண்டு.
தல வரலாறு: இந்த கோயிலுக்குசமயபுர மாரியம்மன் விஜயநகர மன்னர்களுக்கு குலதேவதையாக இருந்தார். ஒரு சமயம் விஜயநகர அரசு வீழ்ச்சியுற அம்மன் சிலையை மட்டும் தந்தப் பல்லக்கில் வைத்து தென் திசை நோக்கி எடுத்து வந்தனர். பல்லக்கு தூக்கிகள் பல்லக்கை ஒரு இடத்தில் வைத்துவிட்டு ஓய்வெடுக்க பின்னர் அந்த இடத்திலிருந்து சிலையை எடுக்கவே முடியவில்லை. அங்கேயே கோயில் உருவானது. இப்பொழுதிருக்கும் கோயில் 18ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விஜயரங்க சொக்க நாயக்கரால் கட்டப்பட்டது.
கோயில் அமைப்பு: திருச்சியிலிருந்து 7 கிமி தொலைவில் இருக்கும் இக்கோயிலில் மூலவருக்கு அபிஷேகங்கள் செய்வது கிடையாது. உற்சவருக்கு மட்டுமே செய்யப்படுகிறது. மூன்று பிரகாரங்கள் கொண்ட இக்கோயிலில் நாம் ஆசார வாயில் வழியாக உள்ளே நுழையலாம். மூன்றாம் பிராகாரத்தின் தென்கிழக்குமூலையில், பௌர்ணமி மண்டபமும் தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபமும், வடகிழக்கு மூலையில் வசந்த மண்டபமும் இருக்கின்றன. இரண்டாம் பிராகாரத்தின் உள்ளே நுழைந்ததும், மண்டபத்தின் மேற்கில் வினாயகர் வீற்றிருக்க கொடிக்கம்பம் நடுவில் இருக்கிறது.
உற்சவ அம்மன் சன்னதிக்குப் பக்கத்தில் கருப்பண்ணசாமி சன்னதி இருக்கிறது.
மூலவர் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்திருக்கும் கோலத்தில் அருள்பாலிக்க, ஐந்து தலை நாகம் அம்மனுக்கு குடைப்பிடிக்கிறது.
உற்சவங்கள்: ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. தை (தைப்பூசம்), பங்குனி, சித்திரை போன்ற மாதங்களில் வருடாந்திர விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி கடைசி ஞாயிற்றுக் கிழமை உற்சவங்களின் தொடக்க நாளாக இருக்கிறது. சித்திரை மாத முதல் செவ்வாய் கிழமை தேர் திருவிழாவும், அதற்கு அடுத்த வாரத்தில் தெப்ப உற்சவமும் கொண்டாடப்படுகிறது.
எப்படி செல்வது? பெரும்பாலான பெரு நகரங்களிலிருந்தும் திருச்சிக்கு பேருந்து, ரயில், விமான வசதிகள் இருக்கிறது. திருச்சியிலிருந்து சமயப்புரத்திற்கு நிறைய டவுன் பஸ்கள் இருக்கிறது. திருச்சியிலேயே நல்ல தரமான ஓட்டல்கள் இருப்பதால் அங்கேயே தங்கியிருந்து சமயபுரம், ஸ்ரீரங்கம், மலைகோட்டை, திருவானைக்கோயில் என பல பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கும் பிரவேசித்து வரலாம்.
-எல்லோரா விஜயா
Want to write for Maniyosai?
| < Prev | Next > |
|---|



